11 பெண்களை காயப்படுத்திய இன்ஸ்டா கிருமி..! போக்சோ பாய்ந்தது

0 1893

ன்ஸ்டாகிராமில் தனிப்பட்ட கணக்கில் பள்ளி, கல்லூரி மாணவிகளுடன் சாட்டிங் செய்து, அந்தரங்க புகைபடங்களை பெற்ற மென்பொறியாளர் ஒருவர், அவர்களை மிரட்டி பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதோடு லட்சக்கணக்கில் பணம் பறித்த சம்பவம் சென்னையில் அரங்கேறி உள்ளது. திண்டுக்கலில் இருந்து சென்னைக்கு பரவிய இன்ஸ்டா கிரிமினல் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

சென்னை வண்ணாரப்பேட்டை பள்ளி ஒன்றில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனது தாயின் ஸ்மார்ட் போனில் இன்ஸ்டாகிராம் பதிவிறக்கம் செய்து தனது புகைபடங்களை பதிவிட்டு வந்துள்ளார்.

அதில் அந்த மாணவி வித விதமான ஆடைகளை உடுத்தி பதிவிடும் ஒவ்வொரு புகைபடங்களுக்கும் அவரை பின் தொடர்ந்த ராஜா என்ற நபர் லைக்குகளுடன் சொக்கவைக்கும் வகையில் புகழ்ச்சியான வார்த்தைகளை கமெண்டாக பதிவிட்டுள்ளார்.

இதனால் அவரது விவரங்களை பெறுவதற்காக சாட்டிங் செய்த அந்த மாணவியை தனது வலையில் வீழ்த்திய ராஜா, செல்போன் நம்பரை பெற்று தொடர்ந்து மாணவியின் மனதை கெடுக்கும் வகையில் பேசி மயக்கி உள்ளான்.

ஒரு கட்டத்தில் அவன் சொன்னபடியெல்லாம் செல்போனில் படம் எடுத்து அதனை தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கில் அவனுக்கு அனுப்பி வைத்துள்ளார் புத்தி கெட்ட அந்த மாணவி. இதனை வைத்துக் கொண்டு அந்த மாணவியை மிரட்டி படுக்கைக்கு அழைத்துள்ளான் ராஜா. மிரண்டு போன அந்த மாணவி அவன் உடனான தொடர்பை துண்டித்துள்ளார்.

இதையடுத்து அந்த மாணவியின் அந்தரங்க புகைபடங்களை வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் 2 லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று மாணவியின் தாயை மிரட்டியுள்ளான் ராஜா. இதனால் அதிர்ந்து போன மாணவியின் தாய் இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் குடும்பத்துக்கே தலைகுனிவு என்று தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இதற்க்கிடையே உறவினர் ஒருவரிடம் இந்த மிரட்டல் குறித்து தகவல் தெரிவிக்க அவரது ஆலோசனை படி வண்ணாரபேட்டை உதவி ஆணையர் ஜூலியஸ் சீசரை சந்தித்து தனது மகளுக்கு இன்ஸ்டா கிருமினலிடம் இருந்து வந்த மிரட்டல் குறித்து விவரித்துள்ளார்.

அவரது யோசனை படி 2 லட்சம் ரூபாய் கொடுக்க சம்மதித்து அழைப்பு விடுத்துள்ளனர். அதன் படி பணத்தை வாங்க வந்த போது இஸ்டா கிருமினல் காவல்துறையினரிரம் வசமாக சிக்கினான்.

அவரை பிடித்து விசாரித்த போது இஸ்டாமிராமில் கிருமியாக செயல்பட்டவன் திண்டுக்கல்லை சேர்ந்த சாய் என்கிற ராஜா சிவசுந்தரம் என்பது தெரியவந்தது. மென்பொறியாளரான இவன் வீட்டில் இருந்தே புராஜக்ட் செய்வதாக மனைவியை ஏமாற்றி இன்ஸ்டாகிராமில் புகைபடங்களை பதிவிடும் மாணவிகளுக்கு காதல் வலை விரித்து அதில் சிக்கும் பெண்களை மிரட்டி பணம் பறிப்பதை தொழிலாக செய்து வந்துள்ளான்.

கடந்த சில ஆண்டுகளாக இதனை செய்து வரும் ராஜா பணம் இல்லை என்று கதறும் பெண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வதையும் வாடிக்கையாக செய்துள்ளான்.

அவனது லேப்டாப்பை கைப்பற்றி ஆய்வு செய்தபோது மேலும் 10 பெண்களின் அந்தரங்க புகைபடங்கள் இருந்தது. அவர்களின் செல்போன் எண்களை பெற்று விசாரித்த போது நடந்ததை கெட்ட கனவாக நினைத்து மென்று விழுங்கி விட்டதாக காயம் பட்ட பெண்கள் கண்ணீர் விட்டு கதறியுள்ளனர்.

இதையடுத்து அவனிடம் இருந்து மிரட்டலுக்கு பயன்படுத்தப்பட்ட லேப்டாப், 3 செல்போன்கள், மற்றும் ஆபாச படங்களை சேமித்து வைத்திருந்த மெமரிகார்டுகள் போன்றவற்றையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் இன்ஸ்டா கிருமி ராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வாட்ஸ்ஆப், முகநூல், டிக்டாக் வரிசையில் இன்ஸ்டா கிராமில் அம்மன்சல்லிக்கு பிரயோசனம் இல்லாத லைக்கிற்காக பெண்கள் தங்களின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை ஆண் நண்பர்களை நம்பி பகிர்ந்தால் அது அவர்களுடைய வாழ்க்கைக்கே வேட்டு வைத்து வீதியில் நிறுத்தி விடும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி..!

 

Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments