இந்திய பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி

0 1078

அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் பதற்றத்தால் இந்திய பங்குச்சந்தைகளில் பெரும் சரிவு ஏற்பட்டது. சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. 

அமெரிக்கா - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள மோதலின் தாக்கம் உலக நாடுகளின் பொருளாதாரத்திலும் எதிரொலிக்க தொடங்கி இருக்கிறது. அமெரிக்க படைகளை வெளியேற்ற தீர்மானம் இயற்றிய ஈராக் மீது மிக கடுமையான பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த எச்சரிக்கையால், பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 70 டாலராக அதிகரித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் காரணமாக ஆசிய பங்குசந்தைகளை தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தைகளும் இன்று கடும் வீழ்ச்ச்சியை எதிர்கொண்டது. முதலீட்டாளர்கள் பீதியில் பங்குகளை விற்று தள்ளியதால், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்தகத்தின் இடையே 850 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி அடைந்தது.

வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 788 புள்ளிகள் சரிந்து 40 ஆயிரத்து 676 புள்ளிகளாக குறைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 234 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 11 ஆயிரத்து 993 புள்ளிகளாக குறைந்தது.

உலோகம், நிதி, ரியல்எஸ்டேட், வங்கி துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் விலை அதிக அளவில் சரிந்தது. கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் என்ற அச்சம் காரணமாக எண்ணெய் நிறுவனங்களின் பங்குகள் விலையும் சரிவடைந்தது.

மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு 157 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 154 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 21 காசுகள் குறைந்து 72 ரூபாய் 2 காசுகளாக இருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments