சிங்கப்பூரை போல.. சென்னையில் லைட் ரயில்..!

0 1425

தாம்பரம்- வேளச்சேரி இடையே அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில், 15.5 கிலோமீட்டர் நீளத்திற்கு, எல்ஆர்டி முறையில் புதிய ரயில் போக்குவரத்து  அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் ஆளுநர் தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆற்றிய உரையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்ட பணியில், திருவொற்றியூர் மற்றும் விம்கோ நகர் இடையேயான நீட்டிப்பு பணிகள் இந்த ஆண்டின் மத்தியில் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட மெட்ரோ திட்ட பணிகளை பொறுத்தவரை மொத்தமுள்ள 118.9 கி.மீட்டர் தொலைவில், 52.01 கி.மீ.நீளத்திற்கு நிதியுதவி அளித்திட ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை ஒப்புதல் அளித்து, முதல் தவணைக்கான கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மீதமுள்ள வழித்தடங்களுக்காக ஆசிய வளர்ச்சி வங்கி , ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் புதிய வளர்ச்சி வங்கி ஆகியவை மூலம் நிதியுதவி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சாத்தியக்கூறு ஆய்வின் அடிப்படையில் சென்னை விமான நிலையத்திலிருந்து புதிய புறநகர் பேருந்து நிலையம் அமையவிருக்கும் கிளாம்பாக்கம் வரையிலான 15.3 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் வழித்தடத்தை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், தாம்பரம் - வேளச்சேரி வழித் தடத்தில் ஏற்படும் அதிகமான போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில் 15.5 கி.மீ. நீளத்திற்கு எல்ஆர்டி என்ற புதிய ரயில் போக்குவரத்து முறை அமைக்கவுள்ளதாகவும், இதற்கான விரிவான சாத்தியக்கூறு மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்றும் ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்ஆர்டி என்பது லைட் ரயில் டிரன்சிட் என்பதன் சுருக்கமாகும். டிராம் வண்டிகளைப் போல் காட்சி அளிக்கும் இந்த ரயில்கள் அதனை விட மேம்பட்ட தயாரிப்பாகும். பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தைவான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் 150க்கும் மேற்பட்ட நகரங்களில் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயிலை விட குறைந்த வேகத்தில் இயக்கமுடியும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments