பதவியேற்பு நிகழ்வில் தள்ளுமுள்ளு, மோதல்
தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்களுக்கான பதவியேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், சில இடங்களில் மோதல், தள்ளுமுள்ளு சம்பவங்கள் அரங்கேறின.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் சுயேட்சை கவுன்சிலர்களை திமுகவினர் கடத்திச் சென்றதாகக் கூறி அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அங்கு மொத்தமுள்ள 19 ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களில் 9 இடங்களை திமுக கூட்டணியும், 6 இடங்களை அதிமுக கூட்டணியும் கைப்பற்றியுள்ளது. ஒன்றியத் தலைவரை தேர்ந்தெடுக்க 10 கவுன்சிலர்கள் தேவை என்ற நிலையில், இரு தரப்பினரும் மீதமுள்ள 4 சுயேட்சை உறுப்பினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பதவியேற்க வந்த சுயேட்சை கவுன்சிலர்களை, நிகழ்ச்சி முடிந்ததும் திமுகவினர் டிராவலர் வாகனத்தில் ஏற்றி அழைத்து செல்ல முயன்றனர். அந்த வாகனத்தை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுகவினர், அதனையும் மீறி அந்த வாகனம் சென்றுவிட்டதால் சுயேட்சை கவுன்சிலர்கள் கடத்தப்பட்டுள்ளதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்காக இருதரப்பினரிடையே நடைபெற்ற மோதலில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மூங்கிலேறி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு உஷா என்பவரும் ரம்யா என்பவரும் போட்டியிட்டனர். இதில் உஷா வெற்றிபெற்ற நிலையில், துணைத் தலைவர் பதவியை தங்களுக்கு வழங்க வேண்டும் என ரம்யா தரப்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதற்கு உஷா தரப்பு மறுத்ததால் மோதலா இருசக்கர வாகனங்களும் வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டன. தகவலறிந்து வந்த போலீசார், லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பின்னர், அமமுக கவுன்சிலர்கள் இருவரை திமுகவினர் அழைத்து சென்றதால், அதிமுகவினருக்கும் திமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அங்கு மொத்தமுள்ள 13 பதவியிடங்களில் தலா 5 இடங்களை அதிமுகவும், திமுகவும் கைப்பற்றியுள்ளன.
எனவே ஒன்றிய தலைவர் பதவிக்கு வாக்களிக்க மீதமிருக்கும் 2 அமமுக கவுன்சிலர்களையும், 1 சுயேட்சை கவுன்சிலரையும் தங்கள் தரப்புக்கு இழுக்கும் முயற்சியில் இரு தரப்பினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பதவியேற்புக்கு பின்னர், திமுக கவுன்சிலர்களுடன் சேர்த்து அமமுகவை சேர்ந்த இரு கவுன்சிலர்களையும் திமுகவினர் அழைத்துச் சென்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுகவினர் அவர்கள் சென்ற காரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்படும் சூழல் உருவானதால், போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
கரூர் அருகே ஒன்றிய கவுன்சிலர் பதவியேற்பு நிகழ்வில் திமுகவைச் சேர்ந்தவரை அதிமுகவினர் தங்கள் வசம் இழுக்க முயற்சி செய்ததாகக் கூறி இருதரப்பினரிடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டவர்களில் அதிமுக கூட்டணி சார்பில் 10 பேரும் திமுக கூட்டணி மற்றும் சுயேட்சைகள் சார்பில் 10 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இதில் அதிமுக தரப்பில் பதவியேற்க தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை என்ற நிலையில், திமுக தரப்பைச் சேர்ந்த சந்திரமதி என்பவரை தங்கள் வசம் இழுக்க அவர்கள் முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு மோதல் உருவானது.
பாதுகாப்புக்கு வந்த போலீசார், சந்திரமதியை தங்களது வாகனத்தில் ஏற்றி பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அதிமுக தரப்பு ஒன்றிய கவுன்சிலரை திமுக வசம் சென்ற சுயேட்சை வேட்பாளர் ஒருவர் அழைத்துச் செல்ல முயன்றதாகக் கூறி பதவியேற்பு நிகழ்வின்போது தள்ளுமுள்ளு, மோதல் ஏற்பட்டது. அங்குள்ள 11 வார்டுகளில் அதிமுக கூட்டணி தரப்பில் 5 பேரும் திமுக கூட்டணி தரப்பில் 4 பேரும் சுயேட்சையாக இருவரும் வெற்றி பெற்றனர். ஜீவிதா, மகேஷ்குமார் ஆகிய அந்த இரண்டு சுயேட்சைகளும் திமுகவுடன் சேர்ந்துவிட்ட நிலையில், அதிமுகவைச் சேர்ந்த அய்யனாரை சுயேட்சை மகேஷ்குமார் அழைத்துச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் தள்ளுமுள்ளு உருவானது.
இருதரப்பையும் சமாதானம் செய்த போலீசார், அய்யனாரை அழைத்துச் சென்று பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்தனர்.
தேனி மாவட்டம் சின்னமனூரில் திமுக சார்பில் நின்று வெற்றிபெற்ற ஒன்றிய கவுன்சிலர் அதிமுகவுடன் இணைய முயற்சித்ததாகக் கூறப்படும் நிலையில், இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சின்னமனூர் ஒன்றியத்தில் உள்ள 10 இடங்களில் 6 இடங்களை திமுகவும் 4 இடங்களை திமுகவும் கைப்பற்றின. இந்த நிலையில், வெற்றிபெற்ற பிரதிநிதிகள் பதவி ஏற்பின்போது, திமுகவைச் சேர்ந்த ஜெயந்தி என்பவர் ஒன்றிய கவுன்சில் தலைவர் தேர்தலில் அதிமுக தரப்புக்கு ஆதரவு தர முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு மோதல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து போலீசார் ஜெயந்தியை மீட்டு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து திமுக தரப்பில் ஜெயந்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பதவியேற்பு நிகழ்வு நடைபெறும் அரங்குக்குள் அனுமதிக்க மறுத்த போலீசாரை, அதிமுகவைச் சேர்ந்தவர்கள் தரக்குறைவாகப் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி சார்பில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்றுக் கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது.
பதவி ஏற்பவர்களைத் தவிர வேறு யாரையும் உள்ளே அனுமதிக்க மறுத்து போலீசார் பாதுகாப்பு ஏற்படுத்தி வைத்திருந்தனர். இதனால் அதிமுகவினர் வெளியே நீண்ட நேரமாக காத்திருந்தனர். சிறிது நேரத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவானந்தம், போலீசாருடன் வாக்குவாதம் நடத்தி, வட்டார வளர்ச்சி அலுவலரின் அனுமதியுடன் சகாக்களுடன் உள்ளே சென்றார். இதனைப் பார்த்த அதிமுகவினர் ஆத்திரமடைந்து, போலீசாரைப் பார்த்து ஒருமையிலும் தரக்குறைவான வார்த்தைகளாலும் வசைபாடினர்.
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியத்தில் சுயேட்சை கவுன்சிலர் ஒருவரை, பதவியேற்றவுடன் சுவர் ஏறி குதிக்க வைத்து திமுகவினர் அழைத்து சென்ற சம்பவத்தால் குழப்பம் ஏற்பட்டது. அந்த ஒன்றியத்தில் மொத்தமுள்ள 16 இடங்களில் 9 இடங்களை அதிமுகவும், 6 இடங்களை திமுகவும் பிடித்த நிலையில், 8வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட அரவிந்த் என்பவரும் வெற்றி பெற்றார்.
கவுன்சிலர்கள் அனைவரும் இன்று பதவியேற்றுக் கொண்ட நிலையில், சுயேட்சை கவுன்சிலர் அரவிந்தை திமுகவினர் பின்வழியாக அழைத்து சென்றனர். பின்னர் சுவர் ஏறி குதிக்க வைத்து காரில் ஏற்றி அழைத்து சென்றனர். ஒன்றியத்தலைவர் பதவிக்கு தேவையான பலம் ஏற்கனவே அதிமுகவுக்கு உள்ள நிலையில், சுயேட்சை வேட்பாளரை திமுகவினர் எதற்காக அவசரமாக அழைத்து சென்றனர் என்பது புரியாமல் அங்கிருந்தவர்கள் குழப்பமடைந்தனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திமுகவினர் பதவியேற்பு நிகழ்வுக்கு காலதாமதமாக வந்ததாகக் கூறி, பதவியேற்பவர் கையொப்பமிடும் ஆவணத்தை அதிமுகவினர் பிடுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மன்னார்குடி ஒன்றியத்தில் ஒன்றிய கவுன்சிலர்களாக வெற்றி பெற்ற 22 பேரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலை 10 மணிக்கு பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி அதிமுக மற்றும் அவர்களது கூட்டணி கட்சியினர் வந்து 10.30 மணிக்குள் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களைத் தொடர்ந்து நீண்ட நேரம் கழித்தே திமுகவினர் வந்ததாகக் கூறப்படுகிறது. காலதமாதமாக வந்ததாகக் கூறி அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்யக் கூடாது என அதிகாரிகளிடம் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து திமுகவினரை கையொப்பம் இட விடாமல் பதவியேற்பு ஆவண புத்தகத்தையும் அதிமுகவினர் பிடுங்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Comments