குரூப் 4 தேர்வை தொடர்ந்து குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு?

0 1533

குரூப் 4 தேர்வினை தொடர்ந்து, குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என ராமநாதபுரம் மாவட்டத்தை மையப்படுத்தி புகார் எழுந்துள்ளது. 2018 குரூப் 2ஏ தேர்வில், ராமேஸ்வரம் மையத்தில் தேர்வு எழுதியவர்களே முதல் 50 இடங்களை பிடித்ததை சுட்டிக்காட்டி இந்த சர்ச்சை எழுந்துள்ளது.

கடந்த செப்டம்பரில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தின், ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய இரு மையங்களில் தேர்வெழுதியவர்களில் 40 பேர், முதல் 100 இடங்களுக்குள் தேர்ச்சி பெற்றிருப்பதில் சந்தேகம் எழுவதாக பிற தேர்வர்கள் கூறியிருந்தனர்.

இரண்டு மையங்களிலும் தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலானோர் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் 15 பேர் மாநில அளவில் முதல் 15 இடங்களில் எவ்வாறு தேர்ச்சி பெற்றனர்? என்பது சந்தேகத்தை எழுப்புவதாகவும் குறிப்பிட்டிருந்தனர். புகார் தொடர்பாக விசாரணை நடத்த, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் உத்தரவிட்டிருக்கிறார்.

ஏற்கெனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் குரூப் - 4 தேர்வு நடைபெற்ற நேரத்தில் கமுதி வட்டாட்சியர் மீனலோசனம், கூடுதலாக வழங்கப்பட்ட OMR விடைத்தாள்களை அவருடைய அலுவலகத்தில் 10 நாட்கள் வரை வைத்திருந்து, பிறகு TNPSC அலுவலகத்தில் ஒப்படைத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், 2018ஆம் ஆண்டு, ஆயிரத்து 953 காலிபணியிடங்களுக்கு நடைபெற்ற குரூப் 2ஏ தேர்விலும், ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் மாநில அளவில் முதல் 50 இடங்களை பிடித்தது குறித்து தற்போது சந்தேகம் எழுப்பப்படுகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 2,500 தேர்வு மையங்களில் ஏழரை லட்சம் பேர் தேர்வு எழுதியிருந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட தேர்வு மையத்தில் இருந்து மாநில அளவில் முதல் 50 இடங்களை பிடித்தது எப்படி என சந்தேகம் எழுப்பப்படுகிறது.

இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் பணி ஆணை வழங்கப்பட்டு அவர்கள் ஏறக்குறைய ஓராண்டு சம்பளமும் பெற்றுவிட்ட நிலையில் இந்த புகார் எழுந்துள்ளது. மேலும் ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய 2 தேர்வு மையங்களில் இதுபோன்று பல்வேறு காலகட்டங்களில் தொடர்ச்சியாக இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற்று இருக்கலாம் என்ற கோணத்திலும் தேர்வர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். இந்த புகார்கள் குறித்து டிஎன்பிஎஸ்சி இதுவரை விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளில் முறைகேடு நடைபெற்றிருக்கலாம் என்ற புகார், பல ஆண்டுகளாக தேர்வுக்கு தயாராகி வரும் எத்தனையோ லட்சம் இளைஞர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதுகுறித்து விரிவான அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments