வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு..

0 1233

மிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் வைகுண்ட  ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று அதிகாலை விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கோவில்களில் வந்து வழிபட்டனர். 

ஸ்ரீரங்கம்:

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளி மாலை அலங்காரத்துடன் நம்பெருமாள் கடந்து வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ரெங்கா ரெங்கா என பக்திப்பெருக்குடன் விண்ணதிர முழக்கமிட்டனர்.

தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களில் இருந்தும், நேற்று இரவு முதலே வந்து கடும் குளிரையும் பொருட்படுத்தாது குவிந்து இருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், சொர்க்க வாசல் திறக்கப்பட்டதும் அதன்வழியாக சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதையொட்டி  ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

சென்னை:

வைகுண்ட ஏகாதசி பெருவிழாயொட்டி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நம்வாழ்வாருக்கு அருளியவாறே பரமபதவாசல் வழியாக எழுந்தருளிய பெருமாளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சென்னை தாம்பரத்தை அடுத்த திருநீர்மலையில் உள்ள ரங்கநாத பெருமாள் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. கொண்டை, கிளி மாலை அலங்காரத்தில் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளிய சுவாமியை, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வைகுண்ட பெருமாள் கோவிலில், அதிகாலை 5 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்பட்டது. இதில் பங்கேற்ற ஏராளமான பக்தர்கள், சிறப்பு அலங்காரத்தில் சயன நிலையில் காட்சியளித்த பெருமாளை நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பின்னர் வைகுண்ட பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருப்பதி :

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நள்ளிரவு 12.30 மணிக்கு திருப்பாவை பாசுரங்களுடன் ஆகம முறைப்படி ஜீயர்கள் முன்னிலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து இரவு முதலே குவிந்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி இன்று காலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி தங்க ரதத்தில் வீதிஉலா நடைபெற்றது. 32 அடி உயர தங்க ரதத்தை பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர். ஏராளமான பக்தர்கள் கோவிந்தா என பக்தி முழக்கமிட்டவாறு நான்கு மாடவீதிகளில் வீதி உலா கோலாகலமாக நடைபெற்றது.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கை அருள்மிகு பக்தவச்சல பெருமாள் ஆலயத்தில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அதன்வழியாக ரத்ன அங்கி அலங்காரத்தில்,  பக்தவச்சல பெருமாள் வந்து காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

கிருஷ்ணகிரி: 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கோப்பசந்திரம் வெங்கடரமணா சுவாமி திருக்கோவிலில் அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

தருமபுரி:

தருமபுரி கோட்டை பரவாசுதேவர் கோவிலில் நடந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில்,அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சுவாமி எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல் :

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கருட வாகனத்தில் லட்சுமி தாயார் சமேதராக எழுந்தருளிய பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் :

திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உற்சவர் காட்சி அளித்தார். அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்துடன் பெருமாளை வழிபட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments