அலையாத்தி காடுகளுக்கிடையே அழகாய் ஒரு படகுப் பயணம்..!

0 1476

புதுச்சேரி சுற்றுலாத்துறையால் முருங்கம்பாக்கம் பகுதியில் தொடங்கப்பட்டிருக்கும் படகு போக்குவரத்து சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

ஏராளமான சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கிய புதுச்சேரியில் புதிதாக உதயமாகி இருக்கிறது இந்த அலையாத்தி காடுகளுக்கு இடையிலான படகுப் பயணம். முருங்கம்பாக்கம் பகுதியில் பரந்து விரிந்திருக்கும் அலையாத்தி காடுகளுக்கு இடையே 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீர்வழிப்பாதை செல்கிறது.

அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த நீர்வழிப்பாதையில் படகுப் பயணத்தை சுற்றுலாத்துறை அறிமுகம் செய்துள்ளது. முருங்கம்பாக்கம் கிராமத்தில் இருந்து தொடங்கும் படகுப் பயணம், பலவகையான பறவைகளின் இசையோடு அமைதியாய் நீண்டு செல்கிறது.

தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் ஆறும் கடலும் சேரும் இடத்தில் அலையோடு சேர்ந்தபின் ஒரு கிலோமீட்டர் பயணம் செய்தால் தமிழரின் பாரம்பரியத்தை காட்டும் அரிக்கன்மேடு பகுதியில் கொண்டு விடப்படுகின்றனர். ரோமானியர்கள் வணிகம் செய்த இடமாக விளங்கிய இந்த இடத்தை பார்த்துவிட்டு மீண்டும் அலையாத்தி காடுகளின் நடுவே பயணம்...

உடலுக்கும் மனதுக்கும் உற்சாகத்தைத் தரும் இந்தப் படகுப் பயணத்துக்கு நபர் ஒருவருக்கு 200 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த நீர்வழிப்பாதை சுற்றுலாவை மேம்படுத்த 18 கோடி ரூபாயை புதுச்சேரி அரசு ஒதுக்கியுள்ளது. இனிவரும் காலங்களில் புதுச்சேரி செல்லும் சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான தேர்வாக இந்த முருங்கம்பாக்கம் அலையாத்தி காடுகள் பயணம் நிச்சயம் இருக்கும் என்று கூறலாம்...

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments