முகமூடி அணிந்து வந்த நபர்கள் தாக்கியதில் டெல்லி பல்கலைக் கழக மாணவர்கள் 30 பேர் படுகாயம்...விசாரணைக்கு உத்தரவு

0 1481

டெல்லி ஜவகர்லால் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதில் 30 பேர் படுகாயமடைந்தனர். இந்த மோதல் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு டெல்லி போலீசாருக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தேர்வுப் பதிவை ஒத்திவைக்க கோரியும், கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் பேரணி நடைபெற்றது. அப்போது, முகமூடி அணிந்த மர்மநபர்கள் மாணவர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் பேராசிரியர்கள், மாணவர் சங்கத் தலைவர் உள்ளிட்ட 50 பேர் காயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு பரபரப்பு நிலவியதால், போலீசார் பல்கலைக்கழக வளாகத்தில் புகுந்தனர். இரவு முழுவதும் பல்கலை வளாகத்தில் பெரும் எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அமைதியை ஏற்படுத்த போலீசார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

மாணவர்கள் விடுதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பிரதான வாயிற் கதவுகள் அடைக்கப்பட்டன.

பல்கலைக் கழக வளாகத்தில் நிகழ்ந்த மோதல்களுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மாணவர்களை கேடயமாகப் பயன்படுத்தி அமைதியை குலைக்க சில சமூக விரோத சக்திகள் செயல்படுவதாக கண்டனம் தெரிவித்துள்ள பாரதிய ஜனதா கட்சி, பல்கலைக்கழகங்கள் கல்வி பயில்வதற்கான இடமாக மட்டும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே, டெல்லி காவல்துறை ஆணையர் அமுல்யா பட்நாயக்குடன் தொலைபேசியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா வன்முறை தொடர்பான இணை ஆணையர் தலைமையில் விசாரணை நடத்தி அறிக்கையை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments