வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு....

0 3512

வைகுண்ட ஏகாதசியையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உள்ளிட்ட வைணவத் திருத்தலங்களில் அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. விடிய விடியக் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் பெருமாளை வழிபட்டனர்.

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 27ந் தேதி வெகுவிமர்சையாக தொடங்கியது. நாள்தோறும், மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரங்களில் அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடைபெற்றது.

ரத்தின அங்கி அணிந்த நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு சொர்க்கவாசலைக் கடந்தபோது ரெங்கா ரெங்கா என பக்தர்கள் பக்திப்பெருக்குடன் முழக்கமிட்டனர்.

இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை மனமுருக வேண்டினர். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியையொட்டி, ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். 

வைகுண்ட ஏகாதசி பெருவிழாயொட்டி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நம்வாழ்வாருக்கு அருளியவாறே பரமபதவாசல் வழியாக எழுந்தருளிய பெருமாளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நள்ளிரவு 12.30 மணிக்கு திருப்பாவை பாசுரங்களுடன் ஆகம முறைப்படி ஜீயர்கள் முன்னிலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனர்.

தருமபுரி கோட்டை பரவாசுதேவர் கோவிலில் நடந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில்,அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சுவாமி எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கை அருள்மிகு பக்தவச்சல பெருமாள் ஆலயத்தில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அதன்வழியாக ரத்ன அங்கி அலங்காரத்தில்,  பக்தவச்சல பெருமாள் வந்து காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments