ராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் திறக்கப்படாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியிருக்கும் கட்டடம்

0 881

ராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள் நோயாளிகளுடன் உதவிக்கு வருபவர்கள் தங்குவதற்காக 48 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டு, 6 மாதங்களாகியும் திறக்கப்படாமல் புதர் மண்டி, குடிகாரர்களின் கூடாரமாக மாறிக்கிடக்கும் கட்டிடத்தை உடனடியாக திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகளாக நூற்றுக்கணக்கானோர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். அவ்வாறு தங்கி சிகிச்சை பெறுபவர்களின் உதவிக்காக வரும் அவர்களுடைய உறவினர்கள் தங்குவதற்கு இடமின்றி மருத்துவமனை வளாகத்திலுள்ள மரத்தடிகளிலும் பார்க்கிங் பகுதிகளிலும் திறந்தவெளி கூடாரங்களிலிலும் தஞ்சமடைகின்றனர். அங்கு படுத்து உறங்கும் பெண்களிடம் நள்ளிரவு நேரத்தில் மது போதையில் சிலர் சில்மிஷத்தில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. மேலும் அவர்களின் உடைமைகளும் அவ்வப்போது திருடுபோவதாகவும் தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.

இந்தப் பிரச்சனையை கருத்தில் கொண்டு மத்திய அரசின் தீனதயாள் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மருத்துவமனை வளாகத்தில் 48 லட்ச ரூபாய் செலவில் புதிதாகக் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. இருபாலரும் தங்கும் வகையில், அனைத்து வகையான அடிப்படை வசதிகளுடன் 6 மாதங்களுக்கு முன் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் இதுவரை திறக்கப்படவில்லை.

கட்டிடத்தின் முன்பு கழிவுநீர் தேங்கி, சுற்றிலும் புதர்கள் மண்டி காணப்படும் இந்த இடத்தை தங்களுக்கான மது அருந்தும் கூடமாக மாற்றி வைத்திருக்கின்றனர் அப்பகுதி குடிமகன்கள். எங்கு பார்த்தாலும் மது பாட்டில்களை காண முடிகிறது. இதுபோன்ற நபர்களால் தங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதாக பெண்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நகராட்சியின் கட்டுப்பாட்டில் வரும் இந்தக் கட்டிடம் திறக்கப்படாதது குறித்து ஆணையாளர் சோமசுந்தரத்திடம் கேட்டபோது, அப்படி ஒரு கட்டிடம் இருப்பதே தெரியாது என்று கூறி அதிர்ச்சியை கொடுத்தார்.

பொதுமக்களின் நலன் கருதி அரசு கொண்டுவரும் திட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் அதிகாரிகள் காட்டும் அலட்சியமே இதுபோன்ற நிலைக்குக் காரணம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். உடனடியாக அந்தக் கட்டிடத்தை திறந்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

 

Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments