சிறார் ஆபாச பட விவகாரம்.. 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை

0 1517

தமிழகத்தில் குழந்தைகள் ஆபாச படத்தை வர்த்தக ரீதியாக எவரேனும் பயன்படுத்தியது தெரியவந்தால்,10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை வழங்கப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி. ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் சிறு மற்றும் குறு தொழில் முனைவோருக்கான ஒரு நாள் தொழிற் பயிற்சி முகாமில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசிய ஏ.டி.ஜி.பி. ரவி, காவலன் செயலியை பெண்கள் பயன்படுத்த அறிவுறுத்தினார்.

ஐதராபாத்தில் பெண் மருத்துவர் கொலையான சம்பவத்தை சுட்டிக்காட்டிப் பேசிய அவர், பெண்கள் உயிருக்கு ஆபத்து நேரும் சூழலில் கொலை கூட செய்யலாம் என்றும், சட்டத்தின் படி அது தவறில்லை என்றும் தெரிவித்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குழந்தைகள் ஆபாச படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் பதிவிறக்கம் மற்றும் பகிர்ந்தது தொடர்பாக கோவையில் நேற்று இருவர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களில் ஒருவர் ஓட்டுநர் என்றும் தெரிவித்தார்.

குழந்தைகளை வாகனத்தில் ஏற்றிச் செல்லும் போது இது போன்ற மனநிலை உள்ளவர்கள் மிக ஆபத்தானவர்கள் எனவும் அவர் கூறினார். இந்த விவகாரத்தில் தமிழகத்தில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 3 பேரும் இதை பொழுதுபோக்காக செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் கூறினார்.

எவரேனும் வர்த்தக ரீதியாக பயன்படுத்தியது தெரிய வந்தால், 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றும் ஏடிஜிபி ரவி கூறினார்.

3000 ஐ.பி. முகவரிகள் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் தமிழகத்தில் உள்ள குழந்தைகள் ஆபாச பட வீடியோக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இது எந்த மாவட்டத்தில் நடைபெற்றது என விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

சென்னையில் குழந்தைகள் ஆபாசப் படங்கள் பதிவேற்றம் தொடர்பாக சென்னை மாநகர காவல்துறைக்கு ஏற்கனவே இரண்டு கட்டமாக சுமார் 75 ஐ.பி. முகவரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அடுத்து ஒரு பட்டியல் தயாராக உள்ளதாகவும் ரவி தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments