விதிகளை மீறிக்கட்டப்பட்ட மராடு அடுக்குமாடிக் குடியிருப்புகளை இடிப்பதற்கான நடைமுறைகள் துவங்கின
விதிகளை மீறிக் கட்டப்பட்ட மராடு அடுக்குமாடிக் குடியிருப்புகளை இடிப்பதற்கான இறுதிகட்ட நடைமுறைகள் துவங்கியுள்ள நிலையில், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.
கேரள மாநிலம் மராடு பகுதியில் கடலோர மண்டல விதிகளை மீறிக் கட்டப்பட்ட 4 அடுக்குமாடிக் குடியிருப்புகளை இடித்து அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி வரும் 11ம் தேதியன்று அந்த கட்டிடங்கள், கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வெடிவைத்து தகர்க்கப்பட உள்ளன.
இதற்காக அவற்றை சுற்றி 200 மீட்டர் தொலைவிலுள்ள வீடுகளிலிருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்தப் பகுதிகளில் 11ம் தேதி காலை 9 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. அருகிலுள்ள வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டால், இழப்பீடு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு கட்டிடத்தில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்டுள்ளன. வெளிநாடுகளை சேர்ந்த நிபுணர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Comments