200 ரூபாய் கப்பம் ஆர்.டி.ஓ அடாவடி..! லாரி ஓனர் அதிரடி

0 1741

கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ. சோதனைச் சாவடியில், வெளிமாநிலங்களுக்குச் செல்லும் சரக்கு லாரிகளை நிறுத்தி, அதிகாரிகள் கூலிக்கு ஆள்வைத்து 200 ரூபாய் வசூல் செய்து வருவது அம்பலமாகியுள்ளது. சோதனைச் சாவடிக்குள் புகுந்து லாரி உரிமையாளர்கள் எழுப்பிய உரிமைக் குரலால், லஞ்சப் பணத்தை திருப்பி கொடுக்கும் நிலை ஏற்பட்டது. 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கர்நாடக மாநில எல்லை அருகே ஆர்.டி.ஓ சோதனை சாவடி ஒன்று உள்ளது. இந்த சோதனை சாவடியில் உள்ள அதிகாரி ஒருவர், கூலிக்கு ஆள்வைத்து சரக்கு லாரிகளை மறித்து 200 ரூபாய் கட்டாய வசூல் செய்வதுடன், 100 ரூபாய்க்கு ரசீது கொடுத்து வருவதாக புகார் எழுந்தது.

சம்பவத்தன்று லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் இந்த சோதனை சாவடிக்குள் நுழைந்து, 200 ரூபாய் வசூல் செய்வதை கையும்களவுமாக பிடித்து உரிமைகுரல் எழுப்பியதால், மேஜை போட்டு அமர்ந்துகொண்டு வசூலை மேற்பார்வையிட்ட அதிகாரி பதில் பேச இயலாமல் பம்மினார்.

கூலிக்கு லாரிகளை மடக்கிய நபரைப் பிடித்து அதிகாரி முன் விசாரித்தபோது, பேச இயலாமல் திணறிய அந்த ஆசாமி, ஒருகட்டத்தில் அதிகாரி கூறித் தான் வசூலிப்பதாக கூறியதால் பரபரப்பு தொற்றிக் கொண்டது..!

ஒரு கட்டத்தில் லாரி தொழிலில் உள்ள கஷ்ட நஷ்டங்களை எடுத்து கூறி லாரி உரிமையாளர்கள் ஆடிய ருத்ரதாண்டவத்தால் கதி கலங்கி போன வசூல் அதிகாரி லஞ்சப் பணத்தை லாரி ஓட்டுனர்களிடமே திருப்பி வழங்கிய அதிசயமும் அற்புதமும் நிகழ்ந்தது.

இனிமேல் லாரி ஓட்டுனர்கள் தவறு செய்தால் மட்டும் அபராதம் வசூலியுங்கள், வழிப்பறி கொள்ளையனை போல கணக்கு வழக்கில்லாமல் வசூல் கொள்ளை அடிக்காதீர்கள் என்று எச்சரித்து விட்டு லாரி உரிமையாளர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். லாரி உரிமையாளர்கள் செய்த இந்த தரமான சம்பவத்தால் ஆர்.டி.ஓ வசூல் அதிகாரி மிரண்டு போய்விட்டார்..!

மாதம் ஒன்றாம் தேதியானால் அதிகாரிகளுக்கு அரசு சம்பளம் அக்கவுண்டில் வந்து விழும் நிலையில், லாரிகளை மடக்கி லஞ்சப்பணமாக லட்சங்களைச் சுருட்டும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே அனைத்து வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments