அரிசி ஏற்றுமதியில் கடும் போட்டி..சவால் விடும் சீனா.! தாக்குப்பிடிக்குமா இந்தியா.?

0 2785

விவசாய நாடான இந்தியாவின் அரசி ஏற்றுமதிக்கு கடும் சவால் விடுக்கும் வகையில் சீனா போட்டியாளராக உருவெடுத்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வாங்குபவரே திடீரென விற்பனையாளராக மாறும் போது சந்தையில் பலத்த போட்டி வரும். தற்போது அந்த சூழல் தான் ஏற்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி:

உலகின் மிக பெரிய அரிசி ஏற்றுமதியாளராக திகழும் இந்தியாவிற்கு போட்டியாளராக வந்துள்ள சீனா, கடந்த 6 மாதங்களில் 3 மில்லியன் டன் அரிசியை அரசுக்கு சொந்தமான கிடங்குகளில் இருந்து ஏற்றுமதி செய்துள்ளது.
இதில் பெரும்பகுதி ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஆப்பிரிக்கா சந்தைகளுக்கு இந்தியாவில் இருந்து தான் அதிக அளவு அரிசி ஏறுமதி செய்யப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது

சீனாவின் தந்திரம்:

பாஸ்மதி அல்லாத அரிசி ஒரு டன்னுக்கு சுமார் 400 டாலர் என்ற விலையில் இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது. ஆனால் சீனாவோ பாஸ்மதி அல்லாத அரிசியை ஒரு டன் 300 முதல் 320 டாலர் என்ற குறைந்த விலையில் ஏற்றுமதி செய்கிறது. விலை வித்தியாசத்தில் இதே நிலை நீடித்தால் நிச்சயமாக இந்தியாவின் அரசி ஏற்றுமதி வரலாற்றில் மிகப்பெரிய தாக்கம் உண்டாகும்.

எப்படி சாத்தியம்..?

பொதுவாகவே சீனர்கள் ஒட்டும் அரிசியையே (sticky rice) பெரிதும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த வகை அரிசி புதிதாக இருக்கும் போது அவர்கள் எதிர்பார்க்கும் சுவை இருக்கும். ஆனால் நாளடைவில் இந்த தனித்துவமான சுவை குறைந்து விடுகிறது. எனவே சீன சந்தையில் புதிய ஏரிகள் பெருகும்போது, இந்த வகை அரிசிகள் மவுசு குறைகிறது. இதனால் சீனர்கள் விரும்பாத நாட்பட்ட அரிசியையே, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு அந்நாடு ஏற்றுமதி செய்கிறது


தசாப்தங்களாக முன்னணியில் இந்தியா:

பல ஆண்டுகளாக உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராக இந்தியாவே முன்னணியில் உள்ளது. இந்தியாவை அடுத்து தாய்லாந்து, வியட்நாம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன. பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதி செய்வதில் இந்தியா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

குறையும் ஏற்றுமதி:

அரிசி ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் இருந்தாலும், சமீப காலமாக ஏற்றுமதி செய்யப்படும் அரிசியின் அளவு மிக வேகமாக குறைந்து வருகிறது. புள்ளி விவரப்படி 2019 ஆம் ஆண்டில் (ஏப்ரல் முதல் நவம்பர் வரை) ரூ .9,028.34 கோடி மதிப்புள்ள பாஸ்மதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்தது. ஆனால் 2018ம் ஆண்டில் இதே காலக்கட்டத்தில் இந்தியா ரூ .14,059.51 கோடி அளவிற்கு அரிசி ஏற்றுமதி செய்திருந்தது.

போட்டியை சமாளிக்குமா இந்தியா:

சீனா கொடுக்கும் கடும் போட்டியை சமாளிக்க பாசுமதி அல்லாத அரிசி வகை ஏற்றுமதியை அதிகரிக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் மக்களுக்கான பொது விநியோக திட்டம் செயல்படுத்தப்படுவதால் இதற்கு அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. சீனா மற்றும் பிற உலகளாவிய நாடுகளின் போட்டியை சமாளிக்க, பாஸ்மதி அல்லாத ஏற்றுமதியாளர்களுக்கு குறைந்தபட்சம் சில ஏற்றுமதி ஊக்கத்தொகையை வழங்கி Food Corporation of Indiaவிலிருந்து அதன் பங்குகளை விடுவிக்க வேண்டும் என்பதே, டெல்லியைச் சேர்ந்த சிறந்த அரிசி ஏற்றுமதி நிறுவனம் ஒன்றின் கருத்தாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments