மூச்சுக்குழாயில் திருகாணி - அறுவை சிகிச்சையின்றி அகற்றி அரசு மருத்துவர்கள் சாதனை
மூதாட்டி ஒருவரின் மூச்சுக்குழாயில் சிக்கிய மூக்குத்தியின் திருகாணியை அறுவை சிகிச்சையின்றி அகற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பட்டம்மாள் விடுதியை சேர்ந்தவர் 55 வயதான புஷ்பம். கடந்த ஒரு மாத காலமாக வறட்டு இருமலால் அவதிப்பட்டு வந்த புஷ்பம், தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
அதன் பிறகும் வறட்டு இருமல் நிற்காத நிலையில், சில நாட்களில் இருமும்போது சளியுடன் ரத்தமும் கலந்து வந்துள்ளது. பயந்துபோன அவர், புதுக்கோட்டை அரசு மருத்துவமனை சென்றுள்ளார். அங்கு புஷ்பத்தை பரிசோதித்த மருத்துவர்கள், மூச்சுக்குழாயில் பிரச்சனை இருப்பதை கண்டறிந்தனர். உடனடியாக புஷ்பத்துக்கு சிடி எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகள் எடுக்கப்பட்டன.
அதன் மூலம் அவரது வலதுபக்க நுரையீரலின் மையப்பகுதிக்குச் செல்லும் மூச்சுக்குழாயில் மூக்குத்தியின் திருகாணி ஒன்று சிக்கியிருப்பது தெரியவந்தது. சாதாரணமாக மூச்சுக்குழாயில் எந்த ஒரு பொருள் சிக்கினாலும் உடல் அனிச்சையாக செயல்பட்டு, தும்மலை ஏற்படுத்தி, அதனை வெளியில் கொண்டு வந்துவிடும். ஆனால் இந்தத் திருகாணி மூச்சுக்குழாயின் அடிப்பகுதி வரை சென்று பக்கவாட்டில் சிக்கியிருந்ததால் தும்மல் மூலம் வெளியே வர வாய்ப்பின்றிப் போனதாக மருத்துவர்கள் கூறினர்.
மூக்குத்தி திருகாணியை அகற்ற வேண்டுமெனில் மார்புப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்வது மட்டுமே ஒரே வழி என்ற நிலையில், மூதாட்டியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு கேமராவுடன் கூடிய “பிராங்க்காஸ்கோப்” என்ற கருவியை மூச்சுக்குழாயினுள் செலுத்தி திருகாணியை உறிந்து வெளியே எடுத்து சாதித்துள்ளனர்.
தனியார் மருத்துவமனையில் இதே சிகிச்சையை மேற்கொள்ள ஒன்றரை முதல் 2 லட்ச ரூபாய் வரை செலவாகும் என்று கூறப்படும் நிலையில், அரசு மருத்துமனை என்பதால் மூதாட்டி புஷ்பத்துக்கு இந்த சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டிருக்கிறது. திருகாணி வெளியே எடுக்கப்பட்ட பின் புஷ்பம் தற்போது நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சுவாசப் பாதையின் பிரதான நுழைவு வாயிலான மூக்குப் பகுதியில் அணியப்படும் மூக்குத்தி போன்ற அணிகலன்களின் திருகாணிகளை அவ்வப்போது பரிசோதித்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். திருகாணிகள் தளர்வாக இருந்தால், மல்லாந்து படுத்து உறங்கும்போது, அவை மூக்குக்குள் செல்லும் வாய்ப்பு அதிகம் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
Comments