மதுரையில் துப்பாக்கி முனையில் ஒப்பந்ததாரர் வீட்டில் 170சவரன், 20லட்சம் மதிப்பிலான ஆவணங்கள் கொள்ளை.
மதுரையில் அரசு சாலை ஒப்பந்ததாரரின் வீட்டில் துப்பாக்கியை காட்டி மிரட்டி 170 சவரன் தங்க நகை, 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்புடைய பத்திரங்களை 5 பேர் கொள்ளையடித்து சென்றதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை கூடல்புதூர் அருகே அப்பாத்துரை முதல் தெருவில் சாலை ஒப்பந்ததாரரான குணசேகரன், தனது மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த 27ம் தேதி நள்ளிரவு அவர் தமது மனைவியுடன் வீட்டில் இருந்தபோது அங்கு வந்த 5 பேர், தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் என்று அறிமுகப்படுத்தியுள்ளனர்.
குணசேகரின் வீட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து சோதனை நடத்த வேண்டுமென தெரிவித்துள்ளனர். அதற்கு அவர்கள் மறுத்ததால், கைத் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நகை, பணம், ஆவணங்களை எடுத்து காண்பித்தபோது, அதிலிருந்த 170 சவரன் தங்க நகை, 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 20 லட்சம் ரூபாய் மதிப்புடைய பல்வேறு பத்திரங்கள் ஆகியவற்றை பையில் எடுத்து போட்டுக் கொண்டு, தேவைப்பட்டால் விசாரணைக்கு அழைப்பதாக கூறி வெளியேறியுள்ளனர். வீட்டு கேட்டை வெளிபக்கமாக பூட்டிவிட்டு 5 பேரும் சென்றனர்.
சுதாரித்து வெளியே வந்த குணசேகரன், மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து மதுரை காவல் ஆணையர் உத்தரவின்பேரில், இந்த கொள்ளை சம்பவம் குறித்து கூடல்புதூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிந்து கொள்ளையர்கள் 5 பேரை தேடி வருகின்றனர்.
Comments