''விளையாட வயது ஒரு தடையல்ல'' பேட்டிங் செய்து கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
ஐஏஎஸ், ஐபிஎஸ் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியை, பேட்டிங் செய்து முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அவருக்கு அமைச்சர் ஜெயக்குமாரும், டிஜிபி திரிபாதியும் பந்து வீசி உற்சாகப்படுத்தினார்கள்.
இந்திய குடிமைப் பணி மற்றும் மத்திய பணி அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ரயில்வே, ஜிஎஸ்டி, வருமான வரித்துறை, வனத்துறை ஆகிய 6 கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டிகள் சென்னை மெரீனா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகின்றன. இந்த போட்டித் தொடரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டிங் செய்து தொடங்கி வைத்தார். அமைச்சர் ஜெயக்குமாரும், டிஜிபி திரிபாதியும் அவருக்கு பந்து வீசினார்கள். தமக்கு வீசப்பட்ட பந்துகளை முதலமைச்சர் அடித்து ஆடினார்.
இதன் பிறகு ஐஏஎஸ், ஐபிஎஸ் அணிகள் மோதிய முதல் போட்டிக்கு முதலமைச்சர் டாஸ் போட்டார். டாஸில் வென்ற ஐஏஎஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இரு அணிகளின் கேப்டன்களுக்கும், வீரர்களுக்கும் முதலமைச்சர் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விளையாட்டின் மூலம் மன அழுத்தம் குறைவதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும் என்றார். ஆரோக்கியம், உடற்கட்டு, நேர்தியான வாழ்க்கை வாழ விளையாட்டு மிக அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Comments