தமிழக சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் காலமானார்
தமிழக சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான பி.எச்.பாண்டியன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 75.
பி. எச். பாண்டியன் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரி என்ற ஊரை சேர்ந்தவர். எம்.ஜி.ஆர். ஆட்சியின்போது அதிமுகவில் செல்வாக்குமிக்க தலைவர்களில் ஒருவராக இருந்தவர்.
சேரன்மகாதேவியில் இருந்து 1977, 1980, 1984 ஆண்டுகளில் அதிமுக சார்பில் சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1980ஆம் ஆண்டு முதல் 1985ஆம் ஆண்டு வரை சட்டமன்ற துணை சபாநாயகராகவும், பிப்ரவரி 27, 1985 முதல் பிப்ரவரி 5, 1989 வரை சபாநாயகராகவும் பதவி வகித்தார்.
1989ஆம் ஆண்டில், அதிமுகவின் ஜானகி ராமச்சந்திரன் பிரிவிலிருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே உறுப்பினர் பி.எச்.பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது. 1999ஆம் ஆண்டில் திருநெல்வேலி தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக அமைப்புச் செயலாளராகவும் இருந்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஓ.பி எஸ் அணிக்கு ஆதரவாகவும் பக்கபலமாகவும், சசிகலா தரப்புக்கு கடுமையான எதிர்ப்பாகவும் இருந்து வந்தார். ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி, சிகிச்சை தொடர்பாக சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும் என முதன் முதலில் வலியுறுத்தியதும் பி.எச்.பாண்டியன்தான்.
அதிமுகவின் மூத்த முன்னோடியான அவர், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை 8 மணிக்கு உயிர் பிரிந்தது. பி.எச்.பாண்டியன் உடலுக்கு இறுதி சடங்கு சென்னையில் நாளை நடைபெறுகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி:
சென்னை அண்ணாநகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பி.எச்.பாண்டியன் உடலுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், சட்டப்பேரவையில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் பி.எச்.பாண்டியன் எனக் குறிப்பிட்டார்.
மு.க.ஸ்டாலின்
பி.எச்.பாண்டியன் மறைவுக்கு திமுக சார்பில் இரங்கல் தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். சட்டப்பேரவைத் தலைவருக்கு "வானளாவிய அதிகாரம்" இருக்கிறது என்பதைத் தனது செயல்பாடுகள் மூலம் வெளிப்படுத்தியவர் பி.எச்.பாண்டியன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு பி.எச்.பாண்டியன் மீது கலைஞர் அளவு கடந்த அன்பு வைத்திருந்ததாகவும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பி.எச் பாண்டியன் மறைவு அரசியல் தலைவர்களுக்கு மட்டுமின்றி, வழக்கறிஞர் சமுதாயத்திற்கும் பேரிழப்பு என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமார், சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோரும் பி.எச்.பாண்டியன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, பி.எச்.பாண்டியன் உடலுக்கு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பி.எச்.பாண்டியன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன், தி.மு.க. பொருளாளர் துரைமுருகனும் அஞ்சலி செலுத்தினார்.
Comments