எல்லை தாண்டியும் தீவிரவாதிகளை அழிப்போம் - புதிய ராணுவ தளபதி எச்சரிக்கை
எல்லை தாண்டிய தீவிரவாதத்தை தொடர்ந்து தூண்டிவிடும் பாகிஸ்தானுக்கு இந்தியா நடத்திய துல்லியத் தாக்குதல் ஒரு வலுவான எச்சரிக்கையை விடுத்தது என்று ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே தெரிவித்துள்ளார்.
2016ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆக்ரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்திய வீரர்கள் துல்லியத் தாக்குதல் மூலம் அழித்தனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதிய தளபதி நரவானே, எல்லையைத் தாண்டி வந்தும் இந்தியா தீவிரவாதிகளை அழிக்க முடியும் என்ற செய்தியை பாகிஸ்தானுக்கு உணர்த்தியிருப்பதாக தெரிவித்தார்.
எதிர்காலத்தில் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பு பாகிஸ்தான் நிறைய சிந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை இந்த தாக்குதல்கள் ஏற்படுத்தியிருப்பதாகவும் இந்த தாக்குதல்களின் போது அணு ஆயுதங்கள் பயன்படுத்த வேண்டிய அவசியமே எழவில்லை என்றும் ராணுவ தளபதி தெரிவித்தார்.
தீவிரவாதம் எங்கே உருவாகிறதோ அங்கே முன் கூட்டியே தாக்குதல் நடத்த இந்தியாவிற்கு முழு உரிமை உள்ளதாக குறிப்பிட்டார். அதேபோல சீன எல்லையில் மேலும் பாதுகாப்பு வலுவாக்கப்படும். எந்த வித அச்சறுத்தல்களையும் சமாளிக்கும் திறன் இந்திய ராணுவத்திற்கு உள்ளதாக தெரிவித்தார்.
Comments