இலவச வேட்டி சேலை முறைகேடு வழக்கு - லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உத்தரவு
இலவச வேட்டி - சேலை திட்டத்தில் 21 கோடியே 31 லட்ச ரூபாய் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், கைத்தறித் துறை அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி -சேலை உற்பத்திக்கு, தரம் குறைந்த நூல்களை அதிக விலைக்கு கொள்முதல் செய்து, அரசுக்கு 21,31,21,250 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக முத்தூர் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு காரணமான கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவரது கோரிக்கை.
சாதாரணமாக ஒரு நாளைக்கு 6 சேலைகள் நெய்யப்படும் நிலையில், தரம் குறைந்த நூல்களை வழங்கியதால் நாளொன்றுக்கு 3 சேலைகளை மட்டுமே நெய்ய முடிவதாகவும் இதனால் தங்களுக்கு வருமான இழப்பு ஏற்பட்டதாகவும் மனுதாரர் தரப்பு நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை மூன்று மாதத்திற்குள் விசாரணை நடத்த உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.
Comments