ஓட்டலில் ஓசி சோறுக்காக நகராட்சி ஊழியர்கள் அடம்..! அம்பலத்துக்கு வந்த மிரட்டல்

0 1480

காஞ்சிபுரத்தில் ஒரு ஓட்டலில் சாப்பிட்ட சோற்றுக்கு பணம் தர மறுத்து 5 நகராட்சி ஊழியர்கள் செய்த அடாவடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சாப்பாட்டிற்கு காசு கேட்ட கடை உரிமையாளரிடம் உரிமத்தை ரத்து செய்வோம் என்று மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி...

ஓசி சோடா குடித்து சிக்கிக் கொள்ளும் சினிமா காமெடி காட்சி போல காஞ்சிபுரத்தில் ஓசி சோறு தின்று சிக்கிய நகராட்சி பாண்டவர்கள் இவர்கள் தான்..!

காஞ்சிபுரம் அத்திவரதர் கோவில் அருகே உள்ள ஓட்டல் ஒன்றிற்கு டிப்டாப்பாக டக் இன் செய்து ஆபீசர் போல உடை அணிந்த நபர் ஒருவர் தன்னுடன் 4 பேரை அழைத்துக் கொண்டு சாப்பிட சென்றுள்ளார். சாப்பிட்டு விட்டு வந்த அந்த டக் இன் ஆபீசர், தான் நகராட்சி ஆய்வாளர் எனவும், 5 சாப்பாடுகளுக்கும் காசு கொடுக்க வேண்டுமா? என கேட்டுள்ளார்.

யாராக இருந்தாலும் சாப்பாட்டுக்கு காசு கொடுக்க வேண்டும் என்று கடை உரிமையாளர் கறாராக கூறியதால், கடை சுகாதாரமாக இல்லை, பிளாஸ்டிக் பயன்படுத்துகிறீர்கள் என குற்றஞ்சாட்டி ஓட்டலின் உரிமத்தை ரத்து செய்து விடுவேன் என மிரட்டி உள்ளார்..!

ஆனால் எதற்கும் அசராத கடை உரிமையாளரோ ஏற்கனவே கடை உரிமத்தை புதுப்பித்து தர வாங்கிய 5 ஆயிரம் ரூபாயை கொடுத்து விட்டு செல்லுங்கள் என்று கூறியதால் அதிர்ந்து போன டக் இன் ஆபீசர், தான் தற்போதைய ஆய்வாளர் அல்ல என்றும் 4 வருடத்திற்கு முன்பு இருந்ததாகவும் கூறியுள்ளார். கடைக்காரர் உக்கிரமாக இருந்ததால் வேறு வழியின்றி 5 பேரும் மூக்கு முட்ட சாப்பிட்டதற்கு பணம் கொடுத்து விட்டு சென்றுள்ளார்.

தங்களிடம் பணம் பெற்ற கடை உரிமையாளர்களுக்கு இன்னும் சில தினங்களில், தங்களது நகராட்சி ஊழியர்கள் சார்பில் தக்க பாடம் புகட்டப்படும் என்று எச்சரிக்கை விடுத்து சென்றுள்ளது அந்த ஓசிச் சோறு கும்பல்..!

அரசு பணி என்ற பெயரில் நகராட்சி அலுவலர்கள் செய்யும் இது போன்ற ஓசிச்சோறு அலம்பல்கள் நீண்ட காலமாக இலைமறை காயாக இருந்தாலும், தற்போது சிசிடிவி காமிராக்களாலும், துணிச்சலான கடைக்காரர்களாலும் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வர தொடங்கி இருப்பது இந்த ஆண்டின் இனிய தொடக்கம் என்றே கூறலாம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments