நெல்லை கண்ணன் கைது

0 4779

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாகவும், கொலை செய்யத் தூண்டும் வகையிலும் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டில் பிரபல மேடைப் பேச்சாளரும், இலக்கியவாதியுமான நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். 

நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. சார்பில் நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில், பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் ஒருமையில் பேசியதோடு, இருவரையும் கொலை செய்யத் தூண்டும் வகையிலும் பேசியதாக நெல்லை கண்ணன் மீது புகார் எழுந்தது.

இது தொடர்பான புகாரின் பேரில் நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரை கைது செய்யச் சென்றபோது உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஹோட்டல் குரு என்ற தனியார் விடுதியில் அவர் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் அவரை கைது செய்யச் சென்றபோது, பாஜகவினரும் எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்தவர்களும் குவியத் தொடங்கினர். நெல்லை கண்ணனை விடுதியில் இருந்து வெளியே அழைத்து வரும்போது, பாஜகவினர் முழக்கங்களை எழுப்பியவாறே அவரை முற்றுகையிட முயன்றனர்.

பாஜகவினருக்கு போட்டியாக எஸ்.டி.பி.ஐ கட்சியினர் எதிர் முழக்கங்களை எழுப்பினர். இந்தக் களேபரங்களுக்கிடையே போலீசார் பாதுகாப்பாக நெல்லை கண்ணனை காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர். கார் சென்றபிறகு இரு கட்சியினரிடையே வாக்குவாதம் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இருதரப்பையும் அமைதிப்படுத்திய போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments