தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் விண்வெளி ஏவுதளம் - இஸ்ரோ தலைவர் சிவன்

0 1705

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் விண்வெளி ஏவுதளம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

மொத்தம் 615 கோடி ரூபாய் செலவில் சந்திராயன்-3 திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இஸ்ரோ தலைவர் சிவன், பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்தார். சந்திராயன்-3 திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்து, திட்டக்குழு உருவாக்கப்பட்டு, பணிகள் சுமூகமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

சந்திராயன்-3 திட்டத்தில் நிலவில் தரையிறங்குவதற்கான லேண்டரும், நிலவின் தரையில் ஆய்வு செய்வதற்கான ரோவரும் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டார்.

லேண்டர், ரோவர் உள்ளிட்டவற்றிற்கு 250 கோடி ரூபாயும், திட்டத்தை ஏவுவதற்கு 365 கோடி ரூபாயும் என மொத்தம் 615 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக சிவன் கூறினார்.

சந்திராயன்-3 திட்டத்தை இந்த ஆண்டே ஏவுவதற்கு திட்டமிடுவதாகவும், இதற்காக 2020ஆம் ஆண்டு நவம்பரை இலக்காக நிர்ணயித்திருப்பதாகவும் இஸ்ரோ தலைவர் தெரிவித்தார். இருப்பினும் இந்த காலஅவகாசம் அடுத்த ஆண்டு வரை செல்வதற்கு வாய்ப்பிருப்பதாகவும் சிவன் குறிப்பிட்டார்.

சந்திராயன்-2 திட்டத்தின் லேண்டர் தோல்வியடைந்தாலும், ஆர்பிட்டர் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், அடுத்த 7 ஆண்டுகளுக்கு அது அறிவியல்பூர்வமான தகவல்களை வழங்கும் எனவும் அவர் விளக்கம் அளித்தார்.

விண்வெளிக்கு இந்திய விண்வெளி வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான வடிவமைப்பு பணிகள் பெரும்பாலும் முடிந்து விட்டதாகவும், இந்த திட்டம் தொடர்பாக இந்த ஆண்டில் பல சோதனைகள் நடத்தப்பட உள்ளதாகவும் சிவன் கூறினார்.

இந்த திட்டத்திற்கான 4 விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு ஜனவரி 3ஆவது வாரத்தில் மாஸ்கோவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் சிவன் தெரிவித்தார்.

ஆளில்லாமல் ககன்யான் விண்கலத்தை விண்ணில் செலுத்திப் பார்க்கும் சோதனை இந்த ஆண்டு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சந்திராயன்-3, ககன்யான் போன்றவற்றால் பிற திட்டங்களுக்கு பாதிப்பு இருக்காது என்றும், நடப்பு ஆண்டில் 25 விண்வெளித் திட்டங்களை செயல்படுத்த உள்ளதாகவும் சிவன் தெரிவித்தார்.

இந்தியாவின் இரண்டாவது விண்வெளி ஏவுதளம் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் அமைவதாகவும், இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியிருப்பதாகவும் இஸ்ரோ தலைவர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments