முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக பிபின் ராவத் பதவியேற்றார்
இந்திய முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக பிபின் ராவத் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
டெல்லியில் உள்ள தேசிய போர் வீரர்கள் நினைவிடத்துக்கு பிபின் ராவத் இன்று காலை சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு வீரர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து நாடாளுமன்ற தெற்கு கட்டிட வளாகத்தில் உள்ள அலுவலகத்துக்கு சென்று முப்படைகளின் தலைமை தளபதியாக பிபின் ராவத் பதவியேற்றுக் கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிபின் ராவத், முப்படைகளின் முயற்சிகளை ஒருங்கிணைப்பதிலும், முப்படைகளும் ஒரே குழுவாக இணைந்து செயல்படுவதிலும் தாம் அதிகம் கவனம் செலுத்த போவதாக கூறினார்.
பாதுகாப்புப் படைகள் அரசியலுக்கு பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து ராவத்திடம் கேள்வியெழுப்பப்பட்டது.
அரசியலில் இருந்து பாதுகாப்புப் படைகள் நீண்ட தூரம் விலகியிருப்பதாகவும், மத்தியில் ஆட்சியிலிருக்கும் அரசின் உத்தரவுக்குட்பட்டே பாதுகாப்புப் படைகள் செயல்படுவதாகவும் பதிலளித்த அவர், வரும்காலத்திலும் அதேபோல்தான் பாதுகாப்புப் படைகள் செயல்படும் என்றும் குறிப்பிட்டார்.
இதனிடையே, முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக பதவியேற்றுள்ள பிபின் ராவத்தை திறமைவாய்ந்த அதிகாரி ((Outstanding Officer )) என்று பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் அவர் இன்று வெளியிட்ட பதிவில், புதிய ஆண்டில் இந்திய முப்படைகளுக்கு முதல் தலைமை தளபதி கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும், அவருக்கு தமது வாழ்த்துகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தேவையான ராணுவ நிபுணத்துவத்துடன் பாதுகாப்பு விவகாரங்களுக்கு புதிய துறையும், முப்படை தலைமை தளபதி பதவியும் உருவாக்கப்பட்டிருப்பது முக்கிய நிகழ்வு மற்றும் மிகப்பெரிய சீர்திருத்த நடவடிக்கை என்று கூறியுள்ள மோடி, நவீன போரில் முன்னெப்போதும் எதிர்கொள்ளாத சவால்களை எதிர்கொள்ள நாட்டுக்கு இது உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
Comments