ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் சொகுசு கார் திருட்டு

0 1308

ஈரோடு அருகே  ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டு காம்பவுன்ட் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காரை திருடிச் சென்ற முகமூடி திருடர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் தேடி வருகின்றனர். 

ஈரோடு அருகே உள்ள திண்டல் தெற்கு பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். ரியல் எஸ்டேட் அதிபரான அவர், தனது வீட்டின் காம்பவுன்ட் வளாக பகுதியில் 12 லட்சம் ரூபாய் மதிப்புடைய போக்ஸ்வேன் சொகுசு காரை நேற்று முன்தினம் (30ம் தேதி) இரவு நிறுத்தியிருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை எழுந்து வந்து பார்த்தபோது, அந்த காரை காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து வீட்டில் இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கும் காட்சிகளை பரிசோதித்தார். அப்போது 2 முகமூடி கொள்ளையர்கள், ஒவ்வொருவராக காம்பவுன்ட் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே ரகசியமாக நுழைவதையும், கம்பி போன்ற சாதனத்தால் காரின் கதவிலுள்ள லாக்கை உடைத்து திறந்து காரை ஸ்டார்ட் செய்யும் காட்சிகள் இருந்ததை கண்டார்.

இதேபோல் காரை பின்னால் திருப்பி வந்து, வேகமாக திருடர்கள் ஓட்டிச் செல்லும் காட்சிகள், திருடர்கள் காரை பின்னோக்கி எடுக்கையில், பின்பக்கமிருந்த பக்கத்து வீட்டு காம்பவுன்ட் கேட் மீது மோதும் காட்சியும், திருடன் ஒருவன் இன்னொரு வீட்டின் காம்பவுன்ட் கேட்டை தட்டி அங்கு யாரும் உள்ளனரா என்று பரிசோதிக்கும் காட்சியும் இருந்தன.

இதையடுத்து சிசிடிவி வீடியோ காட்சிகளுடன் சென்று ஈரோடு தாலுகா காவல்நிலையத்தில் சிவக்குமார் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், காரை திருடிச் சென்ற நபர்களை ஈரோடு தாலுகா காவல்நிலைய போலீஸார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments