தமிழகம் முழுவதும் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவிலும், அதிகாலையிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டின.
சென்னை பெசன்ட் நகர் எலியாட்ஸ் கடற்கரையில் புத்தாண்டை கொண்டாட ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். அங்கு அவர்கள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் புத்தாண்டை சிறப்பாக வரவேற்றனர்.
புத்தாண்டில் பெண்கள் இரவு நேரத்தில் வெளியில் கொண்டாட காவல்துறை பாதுகாப்பை உறுதி செய்துள்ளதால், இந்த புத்தாண்டை கொண்டாடுவதற்கு கடற்கரை வந்திருப்பதாகவும் சில பெண்கள் தெரிவித்தனர்.
கோவை தனியார் நட்சத்திர விடுதியில் இளைஞர்களை கவரும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அங்கு இசைக்கப்பட்ட இசைக்கு ஏற்ப இளைஞர்கள் ஆடியும், பாடியும் புத்தாண்டை வரவேற்றனர்.
திருச்சி காவிரி ஆற்றுப்பாலத்தில் கூடிய பெருந்திரளான மக்கள் மகிழ்ச்சியுடன் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
விழுப்புரம் நகர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பொதுமக்கள் கேக் வெட்டிய போலீசார், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு வழங்கினர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புத்தாண்டை புத்தகங்களோடு கொண்டாடுவோம் என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல்வேறு புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது.
Comments