பத்து நாடுகளின் தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை

0 1901

வருகிற 28-ஆம் தேதி ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி அங்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பத்து நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். 

ஜப்பான் நாட்டின்  ஒசாகா நகரில் வருகிற 28, 29 ஆகிய தேதிகளில் வளர்ந்த நாடுகளின் கூட்டமைப்பான ஜி-20 அமைப்பின் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சர்வதேச பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, கண்டுபிடிப்பு, சுற்றுச்சூழல், எரிசக்தி, வேலைவாய்ப்பு, மகளிர் மேம்பாடு, வளர்ச்சி, சுகாதாரம் ஆகிய 10 தலைப்புகளின் கீழ் விவாதம் நடத்தி பன்னாட்டு தலைவர்களும் முடிவு எடுக்க உள்ளனர். இதே நேரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம், பொருளாதார குற்றவாளிகளை நாடு கடத்துவது, பயங்கரவாதம் ஆகிய பிரச்சனைகளை முன்னிறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.

இதனை வலியுறுத்தவும், பிற நாட்டு தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய உறவுகளை வலுப்படுத்தவும் பிரதமர் மோடி ஜப்பான் செல்ல உள்ளார். அங்கு இரு நாட்கள் தங்கும் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின், சீனா அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

ஜப்பான் பிரதமர் ஷின் ஷி அபே மற்றும் மோரிசனுடன் இந்தோ - பசுபிக் உறவை வலுப்படுத்துவது குறித்து மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது.ஜெர்மன் பிரதமர் மெர்கலுடன் நடைபெறும் சந்திப்பின் போது இந்தியா- ஜெர்மனி இடையிலான பொருளாதார உறவை வலுப்படுத்துவது குறித்து மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்தியாவில் ஜெர்மனியின் முதலீட்டை அதிகரிக்க செய்ய இந்த பேச்சுவார்த்தை மூலம் நடவடிக்கை எடுக்கப்படுமென வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

இந்தோனேசிய அதிபருடனான பேச்சுவார்த்தையில் இருநாடுகளுக்கும் இடையிலான கடல்சார் உறவை வலுப்படுத்துவது குறித்து மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதே போன்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனை சந்திக்க உள்ள பிரதமர் மோடி, இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இது தவிர தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோசா, பிரேசில் அதிபர் ஜேர் போல்சன்னாரோ ஆகியோரையும் சந்திக்கிறார். இந்தியா தவிர்ந்த ஏனைய 19 நாட்டு தலைவர்களின் பத்து பேரை, இரு நாட்களில் சந்தித்து மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT