சுற்றுலாப் பயணிகளை மடக்கிப்பிடித்து தாக்கிய மதுவிலக்கு போலீசார்..! பேருந்து பெர்மிட்டை கேட்டதால் மோதல்

0 409

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உத்தரபிரதேச சுற்றுலா பயணிகளின் பேருந்தை மறித்த மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், பர்மிட் உள்ளதா ? எனக் கேட்டு ஓட்டுனரையும் சுற்றுலாபயணிகளையும் சரமாரியாக அடித்து உதைத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது 

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் மதுவிலக்கு சோதனை சாவடியில் பணியில் இருந்த தலைமை காவலர்கள் இருவர் அந்தவழியாக வந்த உத்தரபிரதேச பதிவெண் கொண்ட பேருந்தை மறித்தனர்.

பேருந்து ஓட்டுனரிடம் விசாரித்த போது , தாங்கள் ஆன்மீக சுற்றுலா வந்திருப்பதாக கூறி உள்ளனர்.

இந்த வழியாக மாதேஸ்வரன் மலை செல்வதாக கூறிய நிலையில் பேருந்துக்கு உரிய பெர்மிட் உள்ளதா ? எனக் கேட்டதாகவும், உடனடியாக ஓட்டுனர் தனது செல் போனில் டிஜிட்டலில் இருந்த பெர்மிட் ஆவணத்தை காண்பித்து, இந்தியில் பேசியபோது, தங்களை தவறாக பேசுவதாக நினைத்த போலீஸ், ஓட்டுனரை இறக்கி ஒரிஜினல் ஆவணத்தை கேட்டு சத்தம் போட்டதால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பேருந்தில் இருந்து இறங்கிய சுற்றுலா பயணிகள் சிலர், எங்க பார்த்தாலும் பணம் கேட்டால் எப்படி ? என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவர்களை கலைந்து போக செய்ய இரு போலீசாரும் கையில் பைப்புகளை எடுத்து அடித்து விரட்டி உள்ளனர்

போலீசார் சாதாரண உடையில் இருந்ததால் தங்களை தாக்குவது போலீஸ் என தெரியாமல் எதிர்தாக்குதலில் ஈடுபட்டதாக கூரப்படுகின்றது

பேருந்து ஓட்டுனர் கையில் கடப்பாறையுடன் போலீசாரை நோக்கி பாய்ந்துள்ளார். அவரை சுற்றுலா பயணிகள் தடுத்துள்ளனர்

கையில் கடப்பாறை எடுத்ததால், ஆத்திரம் அடைந்த போலீசார், இந்தியில் பேசி வாக்குவாதம் செய்த சிலரை சட்டையை பிடித்து இழுத்து வந்து சரமாரியாக அடித்து உட்கார வைத்தனர்

அவரை மற்ற சுற்றுலா பயணிகள் மீட்டுச்சென்றனர்

அக்கம்பக்கத்தினர் சிலர் போலீசாருக்கு ஆதரவாக கையில் கம்பெடுத்தனர், பெண் சுற்றுலா பயணிகளை தாக்கி பேருந்துக்குள் ஏறும்படி மிரட்டியதாக கூறப்படுகின்றது

இதில் காயம் அடைந்த சுற்றுலாபயணிகளும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

அவர்களில் இருவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் பிடித்து வைத்திருப்பதாக கூறப்படுகின்றது. அதே நேரத்தில் சுற்றுலா பயணிகளை சரமாரியாக தாக்கிய இரு காவலர்களும் தாங்கள் காயம் அடைந்ததாக கூறி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர்.

சம்பவம் குறித்து விவரித்த ஓமலூர் டி.எஸ்.பி ஆரோக்யராஜ், மொழி தெரியாததால் உண்டான குழப்பத்தால் இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருப்பதாகவும், வெளி மாநில சுற்றுலாபயணிகளை தாக்கிய மதுவிலக்கு காவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்

இந்த நிலையில் ஓட்டுநர், கிளீனர் கைது செய்யப்பட்டு சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மது விலக்கு பிரிவு காவலர்கள் பணம் கேட்டுமிரட்டி தாக்கியதாக சுற்றுலா பேருந்து ஓட்டுநர் அளித்த புகாரை விசாரித்த கொளத்தூர் காவல் நிலைய போலீசார் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments