நள்ளிரவில் சீறிப் பாய்ந்த கார்.. நிற்காமல் தூக்கி வீசிய பயங்கரம் சினிமாவை மிஞ்சிய சேசிங்..! 5 ஆசாமிகள் சிக்கியது எப்படி?

0 709

இரவில் பல இடங்களில் விபத்தை ஏற்படுத்திவிட்டு, போலீசார் மறைத்தும் நிற்காமல் தப்பி சென்ற காரின் சிசிடிவி காட்சிகள் தான் இவை..

 

கடந்த 24 ஆம் தேதியன்று இரவு 9.15 மணியளவில் திண்டுக்கல் பேகம்பூர் சந்திப்பில் மாவட்ட தனிப்படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டருந்தபோது சாலையில் அதிவேகமாக வந்த TN 49 L6555 எண் கொண்ட பச்சை நிற குவாலிஸ் காரை போலீசார் மறித்த போது நிற்காமல் சென்றுள்ளது. உடனே அந்த காரை பிடிக்குமாறு சாணார்பட்டி போலீசாருக்கு திண்டுக்கல் எஸ்.பி அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது.

இதனையடுத்து போலீசார் சாணார்பட்டி காவல் நிலையம் முன்பு பேரிக்கார்டுகள் அமைத்து தடுக்க முயன்றபோது கார் நிற்காமல் சென்றதாகவும் , பணியில் இருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் சசிகுமாரை கார் இடித்து விட்டு புறப்பட்டதாகவும் கூறப்படுகிறது

உடனடியாக கோபால்பட்டியில் இரவு பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தபோது கோபால்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் உதவியுடன் போலீசார் ஆட்டோக்களை சாலையின் குறுக்கே நிறுத்தியுள்ளனர்.

வேகமாக வந்த கார் ஆட்டோக்களின் இடையே புகுந்து தப்பி சென்றுள்ளது. இதில் சங்கிலிமணி என்பவர் காரை மறிக்க முயன்றபோது கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார்.

தொடர்ந்து நிற்காமல் சென்ற கார் வடுகபட்டி பிரிவு என்ற இடத்தில் போலீசார் வரிசையாக சாலையின் குறுக்கே பேரிக்கார்டுகள் நிறுத்தி வைத்த போதும் அதன் மீது மோதியும் எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதியும் தப்பிச் சென்றுள்ளது.

 

கார் நத்தம் நோக்கி வேகமாக சென்ற போது எருமநாயக்கன்பட்டி பிரிவில் மூன்றுக்கும் மேற்பட்ட லாரிகளை சாலை குறுக்கே நிறுத்தி வைக்கப்பட்டதை பார்த்த மர்ம நபர்கள் யூ-டர்ன் செய்து சக்கிலியன் கொடை ஊர்வழியாக தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது 1 நபர் மட்டும் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடியபோது கிராம மக்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் .விசாரணையில் அவர் திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்த பசுபதி என்பது தெரியவந்துள்ளது.

 

பின்னர் காரில் தப்பிய 4 மர்ம நபர்களும் தண்ணிகொடை வனப்பகுதிக்குள் காரை அதிவேகமாக ஓட்டி சென்றுள்ளனர். இதற்கு மேல் வழி இல்லாததால் காரை புதருக்குள் விட்டுவிட்டு அங்கிருந்து 4 மர்ம நபர்களும் தப்பி ஓடியுள்ளனர். சாணார்பட்டி போலீசார் காரை கண்டறிந்து அதில் இருந்த 2 பட்டாக் கத்திகளை கைப்பற்றினர்.

 

தப்பித்து சென்ற கார்த்தி என்பவருக்கு ஏற்கனவே காலில் காயம் ஏற்பட்ட நிலையில், முத்துக்குமார் என்ற நபருடன் மலையிலிருந்து கீழே இறங்கி வந்தபோது கிராம மக்கள் 2 பேரையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் தலைமறைவான ஆனந்தன் மற்றும் காரை ஓட்டி வந்த வீர கணேஷ் இருவரும் மலையிலிருந்து இறங்கி மணியக்காரன்பட்டி வந்த போது அவர்களை பொதுமக்கள் பிடித்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 

முதற்கட்ட விசாரணையில் சிவகங்கை மாவட்டம் சிறுவத்தியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் ரியல் எஸ்டேட் செய்து வந்த நிலையில் 24 ஆம் தேதியன்று அவரது கார் மட்டும் வாடிப்பட்டி டெம்பிள் சிட்டி ஹோட்டல் அருகே நின்றதாக அவரது சகோதரர் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கைதான 5 நபர்களும் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் கார்த்திகேயனை கடத்தியதாகவும், நத்தம் அருகே கார்த்திகேயனை இறக்கி விட்டபின், கார்த்திகேயன் போலீசிற்கு தகவல் கொடுத்த தகவலின் பேரில் கடத்தல்காரர்களை போலீசார் விரட்டியதாக கூறப்படுகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments