ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ?

0 246

ராணிப்பேட்டை மாவட்டம் முப்பதுவெட்டி கிராமத்தில் சாலையோரம் தாழ்வாக கிடந்த மின்கம்பி உரசி பேருந்தில் மின்சாரம் பாய்ந்ததால் இளம்பெண் ஒருவர் பலியானார். மின்சாரம் தாக்கியவுடன் அந்த பெண் எச்சரித்து கூச்சலிட்டதால் பேருந்தில் இருந்த மற்றவர்கள் உஷாராகி உயிர் பிழைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

தன் உயிரை கொடுத்து மொத்த உயிரை காத்ததால் எப்படியும் மீண்டுவருவாள் என சொந்தங்கள் தட்டி எழுப்பும் சோக காட்சிகள் தான் இவை..!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த 60 செவ்வாடை பக்தர்கள் ஆதிபராசக்திக்கு மாலை அணிந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு பேருந்தில் புறப்பட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி அருகே சாலையோரம் டீ அருந்துவதற்காக பேருந்து நிறுத்தப்பட்டது. சாலையோரம் உள்ள மின் கம்பி பேருந்தின் மேற்கூரை மீது உரசியதால் பேருந்து முழுவதும் மின்சாரம் பாய்ந்துள்ளது.

அனைவரும் இருக்கையில் அமர்ந்திருந்த நிலையில், பேருந்தில் இருந்து கீழே இறங்குவதற்காக முதல் ஆளாக கம்பியை பிடித்த அகல்யா என்ற 20 வயது இளம் பெண்ணை மின்சாரம் தாக்கியது. கம்பியில் கைவக்காதீர்கள் என்று கூச்சலிட்டபடியே கீழே சாய்ந்தார்

இதையடுத்து உஷாரான மற்ற பயணிகள் சீட்டை விட்டு நகராமல் அமர்ந்து கொள்ள, பேருந்து நகர்த்தி நிறுத்தப்பட்டதால் பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் உயிர்தப்பியதாக கூறப்படுகின்றது.

தங்களை காப்பாற்றிவிட்டு மூர்ச்சையாகி கிடந்த அகல்யாவை தூக்கிக் கொண்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு சென்றனர். எப்படியும் மீண்டு வருவாள் என்று அழுது கூச்சலிட்டு எழுப்பி பார்த்தும், அவர் கண்விழிக்கவில்லை.

அகல்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து ஆற்காடு நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்தின் கூரை உரசும் அளவுக்கு தாழ்வாக தொங்கிக்கொண்டிருந்த மின் கம்பியை மின்வாரிய ஊழியர்கள் சரி செய்தனர்.

மாதந்தோறும் பராமரிப்பு பணிகளுக்காக 8 மணி நேரம் மின்சாரத்தை நிறுத்தும் மின்வாரிய அதிகாரிகள் இது போன்று சாலையோரம், பேருந்து நிற்கும் இடங்களில் தாழ்வாக கிடக்கின்ற மின்கம்பிகளை சரி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments