BIG STORIES
அய்யாவா.. சின்னய்யாவா.. பேச்சை கேட்காதவர்களுக்கு பா.ம.கவில் இடமில்லை.. போ.. ஆவேச ராமதாஸ்... அதிருப்தி அன்புமணி..
Dec 28, 2024 04:46 PM
20
0
அய்யாவா.. சின்னய்யாவா.. பேச்சை கேட்காதவர்களுக்கு பா.ம.கவில் இடமில்லை.. போ.. ஆவேச ராமதாஸ்... அதிருப்தி அன்புமணி..
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் சங்க தலைவராக குடும்பத்தில் உள்ள ஒருவரை ராமதாஸ் நியமனம் செய்ததற்கு, கட்சியின் தலைவர் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்ததால், மேடையிலேயே தந்தை மகனுக்கு இடையே கருத்து வேறுபாடு உருவானது.
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு புதுச்சேரியில் கட்சியின் நிறுவன தலைவர் ராமதாஸ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் ராமதாஸ் பேசி முடிந்ததும் பேச்சை தொடங்கிய அன்புமணி, உடகட்சி விவகாரங்களை காரசாரமாக பேசத்தொடங்கினார். போஸ்டரில் எனது படத்தை போடுவதில் நிர்வாகிகளுக்கு இடையே பிரச்சனை இருக்குமேயானால் அய்யாவின் படத்தை மட்டும் போடுங்கள் என்றார்
தொடர்ந்து பேசிய அவர், கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு உயர் பொறுப்பு வழங்குவது கட்சியின் வளர்ச்சிக்கு உதவாது என்று கூறினார்
அன்புமணி பேசிவிட்டு அமர்ந்த அடுத்த சில நிமிடங்களில் , ராமதாஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் சங்க தலைவராக அன்புமணிக்கு உதவியாக என்று பேசிக் கொண்டிருக்கும் போதே, என்னது எனக்கு உதவியாகவா ? என்று அன்புமணி குறுக்கிட்டார்..
இளைஞர் சங்க தலைவராக முகுந்தன் பொறுப்பு வகிப்பார் என்று ராமதாஸ் அறிவித்த அடித்த வினாடியே, 4 மாதத்துக்கு முன்பு கட்சியில் சேர்ந்தவருக்கு மாநில பதவியா ? அவரை தவிர்த்து கட்சிக்காக உழைத்த வேறு ஒருவரை அறிவிக்க கூறினார் அன்புமணி
இதனை கேட்டு ஆவேசமான ராமதாஸ், இது நான் ஆரம்பித்த கட்சி யாராக இருந்தாலும் என்னுடைய பேச்சுக்கு கட்டுப்படவேண்டும் என்று சொல்ல, அன்புமணி சிரித்துக் கொண்டே சரி.. சரி என்றதால் உக்கிரமான ராமதாஸ், என்னது சரி சரியா, எனது பேச்சை கேட்காத, யாராக இருந்தாலும்.. கட்சியில் இருக்க முடியாது என்றார். அதற்கும் அன்புமணி கவுண்டர் கொடுத்ததால் போ.. என்றார் ராமதாஸ்
அன்புமணி பேசிவிட்டு வீசிய மைக்கை ஜி.கே மணி எடுக்க, உடனடியாக அதனை கேட்டு பெற்ற அன்புமணி, தான் பனையூரில் தனியாக கட்சி அலுவலகம் வைத்துள்ளதாகவும் அங்கு வந்து தன்னை சந்திக்குமாறும் கூறினார்
கூட்டம் முடிந்து இருவரும் வெளியில் சென்ற நிலையில் ஆதரவாளர்களுக்குள்ளே போட்டிபோட்டு கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணமாக முகுந்தன் ராமதாஸின் மூத்த மகள் காத்திமதியின் மகன் என்றும் அவரை கட்சியில் முக்கிய பொறுப்பில் நியமித்தால் குடும்பகட்சி என்று முத்திரையை நிரந்தரமாக்கி விடுவார்கள் என்று அன்புமணி வீட்டில் வைத்தே எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
ஏற்கனவே அன்புமணி தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர் கட்சியை விட்டு வெளியேறிய பலர் பாட்டாளி மக்கள் கட்சியை குடும்ப கட்சி என்று குற்றஞ்சாட்டிய நிலையில் அன்புமணி இதனை மாற்ற முயல்வதாகவும் இதனால் தந்தை மகனுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதே நேரத்தில் இது சம்பந்தமாக இருவரும் வீட்டில் போய் அமர்ந்து பேசி பிரச்சனையை சுமூகமாக தீர்த்துக்கொள்வார்கள் என்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.
SHARE
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu
@2024 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News