சாமிமார்களே உஷாரய்யா...! குறுக்கு வழிக்கு 200 ரூபாய் நேர் வழியில் செல்ல ஃப்ரீ
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தலைக்கு 200 ரூபாய் கொடுத்தால் குறுக்கு வழியில் அழைத்துச் சென்று சாமி தரிசனம் செய்ய வைப்போம் என பக்தர்களுடன் இடைத்தரகர்கள் பேரம் பேசும் வீடியோ வெளியாகி உள்ளது.
சக்தி தலங்களில் ஒன்றான திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். தற்போது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று திரும்பும் பக்தர்களும் மாரியம்மன் கோயிலுக்கு அதிகளவில் வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இதனால், பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். நேரடியாக சாமி பார்க்க அழைத்துச் செல்கிறேன் ஒரு ஆளுக்கு 200 ரூபாய் கொடுங்கள் என ஐயப்ப பக்தர்களை குறி வைத்து அவர்களிடம் புரோக்கர்கள் சிலர் பேரம் பேசும் வீடியோ வெளியாகி உள்ளது.
ஒரே நேரத்தில் 16 பேரை அழைத்துச் செல்ல முடியாது என இடைத்தரகர் ஒருவர் கூற, மற்றொரு இடைத்தரகர் பெண் ஒருவரை சுட்டிக்காட்டி இவர் ஏற்கனவே கோயிலில் பணி செய்தவர் அதனால் அவருக்கு எல்லோரையும் தெரியும் என அறிமுகப்படுத்தி பேரம் பேசுகிறார்.
பக்தர்களிடம் இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்டு வரும் இடைத்தரகர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக உள்ளவர்களையும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் வேண்டுகோளாக உள்ளது.
Comments