“பெத்தராயுடு” வீட்டு வாசலில் போராட்டம் நடத்திய மகன் குடும்ப சொத்துக்காக அடிதடி ..! செய்தியாளர் மீது கடும் தாக்குதல்
நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரான தெலுங்கு நடிகர் மோகன்பாபுவுக்கும், அவரது மகனுக்கும் இடையே நடந்த சொத்து தகராறு குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
தெலுங்கு நடிகர் மோகன் பாபு ஊடகவியலாளர்களின் மைக்கை பறித்து தாக்கும் காட்சிகள் தான் இவை..!
தமிழில் நடிகர் ரஜினியுடன் தாய் மீது சத்தியம், கமலுடன் குரு மற்றும் தெலுங்கில் ஏராளமான படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர் நடிகர் மோகன்பாபு.
நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரான மோகன்பாபு 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தவர். தமிழில் வெளியான நாட்டாமை படத்தை தெலுங்கில் பெத்தராயுடு என்ற பெயரில் தயாரிக்க வைத்து சரிந்து கிடந்த மோகன் பாபுவின் திரையுலக வாழ்க்கையை ரஜினிகாந்த் தூக்கி நிறுத்தினார்
மோகன்பாபுவுக்கு இரு மனைவிகள், அதில் ஒருவர் காலமாகி விட்டார். அவருக்கு லட்சுமி என்ற மகளும், மஞ்சு மனோஜ், விஷ்ணு என்ற மகன்களும் உள்ளனர். மூத்த மகன் மஞ்சு மனோஜுக்கு , உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து வைக்க மோகன் பாபு நினைத்திருந்த நிலையில், விருப்பத்துக்கு மாறாக அவர் காதல் திருமணம் செய்த நாளில் இருந்தே இருவருக்கும் இடையே சரியான பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தது.
சொந்தமாக கல்லூரிகள், ஜூபிலி ஹில்ஸ் உள்ளிட்ட மாநிலத்தில் முக்கியமான பகுதிகளில் ஏராளமான வீடுகள், பண்ணைத் தோட்டங்கள், படத்தயாரிப்பு நிறுவனம், பல்வேறு தொழில்கள் என மோகன் பாபு பெரிய கோடீசுவரராக இருந்தாலும், தெலுங்கு திரை உலகில் அவரது மகன் மஞ்சு மனோஜால் முன்னணி இடத்தை பிடிக்க இயலவில்லை , அதே நேரத்தில் விஷ்ணுவை வைத்து கண்ணப்பா என்ற படத்தை மோகன்பாபு பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில் மோகன் பாபு தனது சொத்துக்களை தனது மகளுக்கும் இளையமகனுக்கும் கொடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியானதால், இதனை கண்டித்து மஞ்சு மனோஜ் , ஐதராபாத்தில் உள்ள மோகன் பாபு வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதற்கிடையே வெளி நாட்டில் இருந்து 50 தனியார் பாதுகாவலர்களுடன் வீட்டிற்கு திரும்பிய விஷ்ணு, வாசலில் போராட்டம் நடத்திய மஞ்சு மனோஜை அடித்து விரட்ட முயன்றதாக கூறப்பட்டது.
இதனை படம் பிடிக்க திங்கட்கிழமை காலை முதலே ஏராளமான ஊடகவியலாளர்கள் மோகன்பாபு வீட்டு வாசலுக்கு வெளியே காமிராவுடன் காத்திருந்து நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தனர்
தெலுங்கு செய்தி சேனல்களில் தொடர்ச்சியாக மோகன்பாபு மகனின் போராட்டம் நேரலையில் ஒளிபரப்பான நிலையில் ஆவேசமான மோகன்பாபு தனது வீட்டு வாசலில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர்களை தாக்க தொடங்கினார். தனியார் பாதுகாவலர்கள் துணையுடன் வீட்டில் இருந்து வெளியே வந்த அவர் மைக்கை பறித்து அதனை கொண்டு செய்தியாளரை தாக்கினார்
இதனை படம் பிடித்த ஒளிப்பதிவாளர்களையும் அடித்து உதைத்து தள்ளியதாக கூறப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட செய்தியாளர்கள் போலீசில் புகார் அளித்ததன் பேரில் மோகன்பாபு மீது போலீசார் தாக்குதல் வழக்கு பதிவு செய்தனர். அவரை விசாரணைக்காக காவல் நிலையத்தில் இன்று ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.
Comments