லெபனான், ஈரானை அடுத்து சிரியாவில் போர்.. பற்றி எரியும் கிளர்ச்சி- எண்ணெய் ஊற்றுவது யார்? மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்..
கடந்த 400 நாட்களுக்கு மேலாக நடைபெற லெபனான், ஈரான், இஸ்ரேல் இடையேயான போர் மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. அமெரிக்காவின் தலையீட்டை அடுத்து இந்த மோதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்ததால், உலக நாடுகள் சற்று நிம்மதியடைந்தன. ஆனால், இப்போது மத்திய கிழக்கில் மீண்டும் வெடிகுண்டு சத்தம் கேட்கத் தொடங்கியுள்ளது.
சிரியாவில் கடந்த நவம்பர் மாதம் தொடங்கிய உள்நாட்டு போர் இப்போது தீவிரமடைந்துள்ளது. சிரியா ராணுவத்திற்கும், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் என்ற ஆயுதம் தாங்கிய குழுவினருக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது.
ரஷ்யா, ஈரான் மற்றும் லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா படைகள் உதவியுடன் 13 ஆண்டுகளாக தனது ஆட்சியை சிரியா அதிபர் ஆசாத் தக்கவைத்துவருகிறார். ஆனால், தற்போது நடைபெற்றுவரும் ஆயுத கிளர்ச்சி ஆசாத்துக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய 3 நகரங்களை அடுத்தடுத்து கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதே இந்த நெருக்கடிக்கு காரணம் எனக்கூறப்படுது.
அலிபோ, ஹமா, இட்லிப் ஆகிய நகரங்களை கைப்பற்றியதை அடுத்து ஹோம்ஸ் நகரை நோக்கி கிளர்ச்சியாளர்கள் வேகமாக முன்னேறிவருகின்றனர். சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஹோம்ஸ் நகரை இழந்தால், வலுவான கடற்கரை பகுதியை சிரியா அரசு இழக்க நேரிடும். சிரியாவை லெபனான், ஈராக், ஜோர்டன் ஆகிய நாடுகளுடன் தரை மார்க்கமாக இணைக்கும் ஹோம்ஸ் நகரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. கிளர்ச்சியாளர்களிடம் ஹோம்ஸை இழந்துவிடக்கூடாது என சிரியா அரசு நினைத்தாலும், அதன் ராணுவ வீரர்கள் தொடர்ந்து சரண் அடைந்துவருவது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதையடுத்து தனது நட்பு நாடுகளான ஈரான், ரஷ்யாவிடம் சிரியா வெளிப்படையாக ஆதரவு கோரியுள்ளது.
வெறித்தனமாக தாக்கிவரும் கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த ஹெஸ்பொல்லாவை அதிரடியாக சிரியாவில் களமிறக்கியுள்ளது ஈரான். முதல்கட்டமாக ஹெஸ்பொல்லா கண்காணிப்புப் படையின் சிறு குழுவினர் விமானம் மூலம் சிரியா சென்று மோதல் களத்தில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராணுவ கிளர்ச்சியாளருக்கு ஆதரவாக செயல்படுவதாக இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் உக்ரைன் மீது சிரியா வெளிப்படையாக குற்றச்சாட்டியுள்ளது. கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை வழங்குவதுடன், பயிற்சி அளிப்பதை உடனே நிறுத்த வேண்டும் எனவும் சிரியா வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில்தான், தங்களது நாட்டவர்கள் உடனே சிரியாவிலிருந்து வெளியேறுமாறு இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
Comments