முதலிரவு அறையில் மாப்பிள்ளை.. செல்போனை ஆய்வு செய்த மணமகள்.. சாட்டிங் ஹிஸ்டரியால் ரிஸ்க்கான LIFE..! மறுவீடு சாப்பாடு ஜெயிலிலே..!
சென்னை புதுவண்ணாரபேட்டையில் திருமணம் முடிந்த அன்று முதலிரவு அறையில் மாப்பிள்ளையை அடைத்து வைத்த பெண் வீட்டார், செல்போனை ஆய்வு செய்த போது அவர் பல பெண்களுடன் தொடர்பில் இருந்த ஆதாரம் சிக்கியதால் அவரை போலீசில் ஒப்படைத்தனர்.
சென்னை புதுவண்ணாரபேட்டையில் திருமண மண்டபம் ஒன்றின் முன்பு கடந்த 2ந்தேதி தன்னை ஏமாற்றி விட்டு மாப்பிள்ளை வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள பார்க்கிறான் என பாதிக்கப்பட்ட பெண் போராட்டம் நடத்திய காட்சிகள் தான் இவை..!
கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அடுத்த நெய்த மங்களம் கிராமத்தை சேர்ந்த லிசான் கிறிஸ்டோபர் என்பவரின் மகன் லிஜின் மீது தான் அந்த பெண் குற்றஞ்சாட்டி போராட்டம் நடத்தினார். பாதிக்கப்பட்டதாக கூறிய பெண்ணை பணம் பறிக்க வந்திருப்பதாக மாப்பிள்ளை வீட்டார் கூறியதால், அந்த பெண்ணை ஆட்டோவில் இழுத்து போட்டு சென்றனர்.
இதையடுத்து மேட்ரி மோனியல் மூலம் ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்ட புது வண்ணாரபேட்டையை சேர்ந்த BE பட்டதாரி பெண்ணுடன், லிஜினுக்கு திருமணம் முடிந்தது. தனக்கு திருமணம் முடிவதற்கு முன்பாக வெளியே பெண் ஒருவர் போராட்டம் நடத்திய தகவல் மணப்பெண்ணுக்கு கிடைத்ததும் உஷாரான மணமகள் முதலிரவை ரத்து செய்ததுடன், உறவினர்களுடன் சேர்ந்து புது மாப்பிள்ளை லிஜினை முதலிரவு அறையில் தனியாக அடைத்து வைத்தார். அவரது செல்போனை கைப்பற்றி, இன்ஸ்டாகிராம், முகநூல் சாட்டிங், ஆடியோ ரிக்கார்டிங் மற்றும் புகைப்பட ஆதாரங்களை ஆய்வு செய்ததில், லிஜின் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததை கண்டுபிடித்ததாக கூறப்படுகின்றது.
லிஜினின் பெற்றோருக்கு போன் செய்த போது அவர்கள் திருமணம் முடிந்த கையோடு செல்போனை சுவிட்ஜ் ஆப் செய்து விட்டு தலைமறைவானது தெரியவந்தது. இதையடுத்து முதலிரவு அறையில் காத்திருந்த லிஜினை பெண் வீட்டார் போலீசில் ஒப்படைத்தனர்.
ஏற்கனவே லிஜின் 2019 ஆம் ஆண்டு காரைக்காலை சேர்ந்த பெண்ணை ஏமாற்றி ஆறு மாதம் கர்ப்பமாக்கிய புகாரில் அந்தப் பெண்ணிற்கு 5 லட்சம் பணம் கொடுத்து சமாதானம் செய்தது தெரியவந்தது. 2022 ஆம் ஆண்டு தென்காசியை சேர்ந்த பெண்ணை காதலித்து ஏமாற்றியதாகவும், 3 வதாக 2023 ஆம் ஆண்டு கடலூரைச் சேர்ந்த பெண்ணுடன் ஒரு வருடம் சேர்ந்து குடித்தனம் நடத்தி விட்டு கம்பி நீட்டியதும் தெரியவந்தது. போலீசார் விசாரிக்காமல் விட்டதால் 4வது பெண்ணையும் லிஜின் ஏமாற்றி தாலி கட்டி இருப்பது தெரியவந்தது.
மோசடி திருமண மன்மதன் லிஜினை கைது செய்த போலீசார், அவரால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். அதே நேரத்தில் 4 பெண்களை ஏமாற்றிய மேட்ரிமோனியல் மாப்பிள்ளை சாயம் வெளுத்து, தற்போது சிறையில் கம்பி எண்ணி வருகின்றார்.
Comments