" நாங்க என்னய்யா பாவம் செய்தோம்..? "தண்ணீரை திறந்து ஊருக்குள் விட்டீங்க.. சாப்பிட கெட்டுப்போன உணவு தர்ரீங்க..? " இப்படியுமா பேரூராட்சி ஊழியர்கள்..?
விழுப்புரம் மாவட்டம் அரகண்ட நல்லூர் பகுதியில் வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பூஞ்சை படிந்த கெட்டுபோன உணவு வழங்கப்பட்டதாக கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பெண்ணை யாற்றின் வெள்ளம் ஊருக்குள் பாய்ந்ததால் பெரும் பாதிப்பிற்குள்ளான அரகண்ட நல்லூர் மக்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வீடு வீடாக சாப்பிட உணவு வழங்கப்பட்டது. பசியில் இருந்த பெண் ஒருவர் அதனை சாப்பிட திரந்து பார்த்த போது அது பூஞ்சை பிடித்து ஊசிப்போய் இருந்ததாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அந்த பொட்டலம் தான் சரி யில்லை என்று அவர்கள் கொடுத்த அனைத்து சாப்பாட்டு பொட்டலங்களையும் திறந்து பார்த்த போது அவற்றில் இருந்த சாதம் கெட்டுபோன வாடை வீசுவதாக கூறி சாலையிலேயே திறந்து வைத்தனர்.
“ போகிற உயிர் பசியில போட்டும், கெட்டுப்போன உணவை சாப்பிட்டு விட்டு ஆஸ்பத்திரிக்கு அழைய நாங்கள் தயாரில்லை என்று ஆதங்கப்பட்டனர்.
உணவு வழங்க வந்த பேரூராட்சி ஊழியர்கள் சாப்பாடு பொட்டலங்களை திறந்து பார்த்து உணவு கெட்டுபோனதை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இதையடுத்து பேரூராட்சி அலுவலகத்தில் மக்களுக்கு வினியோகிக்க அட்டைப்பெட்டிகளில் வைத்திருந்த ஆயிரக்கணக்கான உணவு பாக்கெட்டுகள் குப்பை லாரியில் ஏற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.
இந்த உணவை அனுப்பி வைத்த திருவெண்ணை நல்லூர் பி.டி.ஓ பாலுவிடம் விசாரித்த போது, தனக்கு திருச்சியில் இருந்து புதன்கிழமை மாலை 5 மணிக்கு தயாராகி வந்த 1500 உணவு பொட்டலங்களை, இரவு 8 மணிக்கு மக்களுக்கு சாப்பிட கொடுக்குமாறு அனுப்பி வைத்ததாகவும், ஆனால் அரகண்ட நல்லூர் பேரூராட்சி ஊழியர்கள் வியாழக்கிழமை மதியம் 12 மணிக்கு மேல் மக்களிடம் சாப்பிட கொடுத்ததால், அவை கெட்டு போயிருக்கும் என்றார்.
வெள்ளத்தால் ஏற்கனவே உடமைகளை இழந்து தவித்து நிற்கும் மக்களுக்கு சாப்பிடுவதற்கு தரமான உணவை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
Comments