யெய்யா.. கையை விட்ருய்யா.. அடித்துச் செல்லப்பட்ட வெள்ளத்தில் தந்தையின் கடைசி நிமிட தியாகம்..! அப்பா.. அப்பா.. உன்னை விட்டால்..
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் மலட்டாற்று ஆற்றின் கரையோரம் விவசாய நிலம், கால்நடைகள், டிராக்டர் என வாழ்ந்து வந்த பால்வியாபாரியான கலையரசன் தான், தனது மகன் மற்றும் மனைவியின் உயிரை காக்க தனது உயிரை தியாகம் செய்தவர்.
மலட்டாற்று வெள்ளம் திங்கட்கிழமை அதிகாலையில் கலையரசனின் வீட்டையும் சூழ்ந்ததால் மனைவி, மகன் புகழேந்தியுடன் மொட்டை மாடிக்கு சென்றார் கலையரசன். வீட்டின் பின் சுவர் இடிந்து விழவே,வீடும் இடிந்து விடுமோ என்ற அச்சத்தில் தனது மகன் மற்றும் மனைவியின் கை இறுகப்பற்றிக் கொண்டு ஓடும் வெள்ளத்தில் இறங்கினர். கரையை நோக்கி சென்ற மூவரையும் வெள்ளம் இழுத்துச் சென்றது. வெள்ளத்தின் வேகத்திற்கு தாக்குபிடிக்க இயலாமல் கலையரசன் மூழ்கும் நிலை ஏற்பட்டது.
தன்னால் மனைவி, மகனும் வெள்ளத்திற்குள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்று தனது கையை மகனின் பிடியிலிருந்து வலுக்கட்டாயமாக விலக்கிக் கொள்ளவே வெள்ளத்தில் அவர் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் மகன் புகழேந்தி, தாயுடன் அருகில் உள்ள வேப்பமரத்தில் ஏறி தஞ்சம் அடைந்தார். கலையரசனின் வீடு இடிந்ததை தெரிந்துக் கொண்ட அவரின் உறவினர்கள் மீட்பு குழுவினரை அணுகினர். மாவட்ட நிர்வாகம் மூலம் ராணுவத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு நள்ளிரவில் வந்த ஹெலிகாப்டர் மரத்தில் அமர்ந்திருந்தவர்களை அடையாளம் கண்டாலும் இரவில் மீட்பது சவாலானது என்று திரும்பிச்சென்றதாக கூறப்படுகின்றது.
பின்னர் நள்ளிரவு 12:30 மணியளவில் மீட்பு குழுவினர் உதவியுடன் ஊர் மக்களே கயிறு கட்டிக் கொண்டு வெள்ள நீரில் இறங்கி தாயையும், மகனையும் மீட்டனர். தனக்கும், அம்மாவிற்கும் ஆபத்து நேர்ந்து விடக் கூடாது என்பதற்காக தனது கையை அப்பா விடுவித்துக் கொண்டதாக கூறி கதறினார் மகன் புகழேந்தி.
வெள்ளம் அடித்துச் செல்லப்பட்ட பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் முட்புதரில் சிக்கியிருந்த கலையரசனின் சடலம் மறுநாள் மீட்கப்பட்டது. கலையரசனின் உயிரிழப்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறவினர்களுக்கு கூடுதல் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Comments