“கூடி விளையாட போனதுங்க.. மண்ணுக்குள்ள போயிருச்சே..” 7 பேர் பலியான பின்னணி..! கண்ணீரில் கதறித்துடித்த உறவுகள்
திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் ஏற்பட்ட மண் சரிவால், 7 உயிர்களை பறிகொடுத்து விட்டு, துக்கத்தை தாங்கிக் கொள்ள இயலாமல் உறவினர்கள் கதறி அழும் சோகக் காட்சிகள் தான் இவை..!
பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையை 30-ந்தேதி முதலே பெருமழை புரட்டிபோட்டது. அதே வேளையில் , 1-ந்தேதி மாலை 4 மணியளவில் தீப மலையை யொட்டி ஆஸ்பெட்டாஸ் வீட்டில் வசித்து வந்த ராஜ்குமார் என்பவரது வீட்டிற்குள் செம்மண்ணோடு கலந்த மழை நீர் புகுந்துள்ளது.
அப்போது ராஜ்குமாரின் வீட்டில் அவரது மனைவி மீனா, மகன் கவுதம், மகள் இனியா ஆகியோருடன் , விளையாட வந்திருந்த பக்கத்து வீடுகளில் வசிக்கின்ற வினோதினி , ரம்யா, மகா ஆகிய சிறுமிகளும் இருந்துள்ளனர். சுதாரித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவதற்குள்ளாக , அடுத்த சில வினாடிகளில் ராட்சத பாறையுடன் சட சடவென சரிந்த செம்மண் சகதியில் மூழ்கி ராஜ்குமாரின் வீடும், மற்றொரு வீடும் மண் மேடானது. சிறு சிறு கற்கள் பாறைகள் உருண்டுவருவதை கண்ட சிலர் ஓடி தப்பித்துக் கொண்டனர். 7 பேரின் கதி என்ன என்பது தெரியாமல் உறவினர்கள் தவித்தனர்
பதறித்துடித்த உறவினர்கள் மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். முதலில் வந்த போலீசார் அக்கம்பக்கத்தினரை அப்புறப்படுத்தினர். தீயணைப்பு வீரர்கள், மத்திய மாநில பேரிடர் மீட்புக்குழுவினருடன் இணைந்து மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்
பெரிய அளவிலான பொக்லைன் மற்றும் ஜே.சி.பி யை அந்தபகுதிக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டதால் மீட்பு பணி 24 மணி நேரத்தை கடந்தும் நீட்டித்தது. ஒரு கட்டத்தில் குறுகலாக இருந்த வழியை அகலப்படுத்த அக்கம்பக்கத்து வீடுகளின் காம்பவுண்டு சுவர்கள் இடித்து அகற்றப்பட்டது
தொடர்ந்து பெரிய அளவிலான ஜேசிபியை கொண்டு சென்று மீட்பு பணியை வேகப்படுத்தினர். அடுத்தடுத்து 4 பேரின் சடலங்கள் மண்ணிற்குள் இருந்து மீட்கப்பட்டன. அந்த சடலங்களை பிணகூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
சம்பவம் நடந்தது குறித்து விவரித்த உறவினர்கள் சோகத்தை அடக்க இயலாமல் கதறித்துடித்தனர்
Comments