சுப நிகழ்ச்சி செல்ல திட்டமிட்ட ஐ.டி.ஊழியரின் குடும்பத்தை கழுத்தறுத்த களவாணி யார்..? 10 நாட்களாக நோட்டமிட்டவரிடம் விசாரணை..

0 180

தனது கணவர் , மாமனார் மற்றும் மாமியார் கொல்லப்பட்டதால் துக்கம் தாளாமல் கதறி அழுத பெண், காவல் ஆணையரிடம் ஆவேசமாக முறையிடும் காட்சிகள் தான் இவை.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சேமலை கவுண்டம் பாளையத்தை சேர்ந்த தெய்வசிகாமணி - அலமாத்தாள் தம்பதியினர் அங்குள்ள தோட்டத்து வீட்டில் தங்கி தென்னை விவசாயம் செய்து வந்தனர். இவர்களது மகன் மற்றும் மகளுக்கு திருமணம் முடிந்து அவரவர் குடும்பத்துடன் வெளியூர்களில் வசித்து வந்தனர். அந்த கிராமத்தில் உறவினர் வீட்டில் நடக்க இருந்த சுப நிகழ்ச்சியில் பங்கேற்க , கோவையில் இருந்து ஐ.டி ஊழியரான இவரது மகன் செந்தில்குமார் மட்டும் சேமலை கவுண்டம் பாளையத்திற்கு வந்திருந்தார். வெள்ளிக்கிழமை காலையில் தனக்கு சவரம் செய்ய வீட்டுக்கு வருமாறு சவரத்தொழிலாளிக்கு தகவல் சொல்லி விட்டு வியாழக்கிழமை இரவு தெய்வ சிகாமணி தூங்கச்சென்றதாக கூறப்படுகின்றது.

அதன்படி காலை 6 மணியளவில் சவரத்தொழிலாளி தோட்டத்து வீட்டுக்கு சென்ற போது, கழுத்து அறுபட்ட நிலையில் தெய்வ சிகாமணி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்த போது படுத்து உறங்கிய நிலையில் தெய்வசிகாமணியின் மனைவி அலமாத்தாள் , மகன் செந்தில்குமார் ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தனர்.

இதனை கண்டு அலறியடித்துச்சென்ற சவரத்தொழிலாளி கொடுத்த தகவலின் பேரில் அக்கம் பக்கத்தினரும் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தெய்வசிகாமணியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் வழியிலேயே பரிதாபமாக பலியானார். வியாழக்கிழமை நள்ளிரவு தோட்டத்து வீட்டில் 3 பேரும் தூங்கிக் கொண்டிருந்த போது உள்ளே நுழைந்த மர்ம ஆசாமிகள் ஒருவர் பின் ஒருவராக கொடூரமாக கொலை செய்திருக்கலாம் என்ற போலீசார் கொலையாளிகள் அலமாத்தாள் அணிந்திருந்த கம்மல் மற்றும் தங்க சங்கிலியை மட்டும் பறித்துச்சென்றிருப்பதாகவும் வீட்டில் எவ்வளவு நகை பணம் இருந்தது ? என்பது யாருக்கும் தெரியாததால் களவு போன பொருட்களின் மொத்த மதிப்பு தெரியவில்லை என்றனர்.

கோவையில் இருந்து வந்த ஐ.டி,ஊழியரின் மனைவி கவிதா , காவல் ஆணையர் லட்சுமியிடம் , கொலையாளிகளை சும்மா விட்டுவிடாதீர்கள்... என்றும் கண்டுபிடிச்சு கொடுக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.. என்றும் ஆவேசமாக வேண்டுகோள் விடுத்ததோடு துக்கம் தாளாமல் கதறி அழுதார்.

மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது, வீட்டை சுற்றிலும் கைரேகைகளை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாயல்குடியை சேர்ந்த கணவன் மனைவி , தெய்வ சிகாமணியின் தோட்டத்தில் தங்கி வேலைப் பார்த்ததாகவும், அவரது நடவடிக்கை சரியில்லாததால் அவரை வேலையை விட்டு நிறுத்தியதாகவும் கூறப்படுகின்றது. அந்த நபர் மற்றொரு ஆசாமியுடன் கடந்த 10 நாட்களாக தெய்வசிகாமணியை நோட்டமிடுவதாக தனது உறவினர்களிடம் அவர் கூறியதாக போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பல்லடம் போலீசார் கொடுத்த தகவலின் பேரில் சந்தேகத்துக்கிடமான ஆசாமியை , சாயல்குடி போலீசார் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்து வருகின்றனர். இந்த கொலை நகைக்காக நடத்தப்பட்டதா ? அல்லது வேறு காரணங்களுக்காக நடந்ததா ? என்பது கொலையாளிகள் சிக்கினால் மட்டுமே தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments