ஓ.எம்.ஆர் சாலையில் ஓவர் ஸ்பீடு 5 பெண்களை காரால் அடித்து தூக்கிய கல்லூரி மாணவர்கள் ..! அடித்து துவைத்த பொதுமக்கள்
அதிவேகமாக கார் ஓட்டி 5 பெண்களின் உயிரை காவு வாங்கிய மாணவர்களை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து தாக்கிய காட்சிகள் தான் இவை..!
கார் மோதிய வேகத்தில் சாலையோரம் சிதறிக்கிடந்த பெண்களின் சடலங்களை கண்டு உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்..!
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த பண்டிதமேடு கிராமத்தை சேர்ந்த பெண்கள் தங்கள் மாடுகளை அங்குள்ள ஏரியில் மேய்ச்சலுக்கு விட்டு, பழைய மகாபலிபுரம் சாலையோரம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. அப்போது சென்னையில் இருந்து மகாபலிபுரம் நோக்கி அதிவேகமாகச் சென்ற ஸ்கோடா கார் ஒன்று இருசக்கர வாகன் ஒன்றின் மீது மோதுவது போல சென்றதாகவும், அந்த வாகன ஓட்டி காரை துரத்தி வந்ததாகவும் கூறப்படுகின்றது.
அதிவேகத்தில் காரை இயக்கியவர்கள் சாலையில் தங்களுக்கு முன்னால் சென்ற ஆட்டோ மீது மோதாமல் இருக்க இடது பக்கமாக காரை திருப்பியதால் , சாலையோரம் அமர்ந்திருந்த பெண்கள் மீது கார் பயங்கரமாக மோதி 5 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்
தொடர்ந்து அதிவேகமாக தப்பிச்செல்ல முயன்றாலும், கார் பழுதானதால் அங்கேயே நின்று விட்டதாக கூறப்படுகின்றது
இந்த கோர விபத்தை கண்ட பொதுமக்கள் விரைந்து வந்து விபத்தை ஏற்படுத்திய காரை சுற்றி வளைத்தனர். இருவர் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடிய நிலையில் காருக்குள் அமர்ந்திருந்த இருவரை வெளியே இழுத்து சரமாரியாக அடித்து உதைத்தனர்
இந்த விபத்தில் அந்த பண்டிதமேடு கிராமத்தை சேர்ந்த ஆனந்தம்மாள், விஜயா, கலா, லோகம்மாள், யசோதா என்பது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த கிராமத்து மக்கள் தங்கள் உறவினர்கள் கார் மோதி பலியாகி கிடப்பதை கண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
தங்கள் உறவினர்களின் உயிர் பலிக்கு நியாயம் கேட்டு ஓ.எம்.ஆர் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு தரப்பினர் போலீசாரிடம் சிக்கிய இருவரையும் தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டு போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தவர் தனியார் கல்லூரி மாணவர் ஜோஸ்வா என்பது தெரியவந்தது. கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் 4 பேரும் காரில் சுற்றி வந்ததாகவும், அதிவேகமாக காரை இயக்கியதால் இந்த கோர விபத்து நிகழ்ந்ததாகவும் தெரிவித்த போலீசார் அவர்கள் மது அருந்தி இருக்கிறார்களா என்பதை கண்டறிய மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச்சென்றனர்.
Comments