வேலைக்கு வந்தவரை அடைத்து வைத்து கொடுமை.. கேள்வி கேட்டால் அடி, உதை.. தப்பிக்க நினைத்தால் திருட்டுப் பட்டம்!

0 264

காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணான நூறுக்கு அழைத்த பெண் ஒருவர், கோவை விளாங்குறிச்சியில் இருந்து பேசுவதாகவும் வேலைக்கு வந்த தன்னை வீட்டுக்குள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துகின்றனர் என்றும் கூறி அழுதுள்ளார்.

சரவணம்பட்டி காவல் நிலைய போலீசார் அந்த வீட்டுக்குச் சென்றபோது வெளிப்பக்க இரும்பு கேட்டும், உள் பக்க இரும்பு கேட்டும் பூட்டி இருந்தன. தன்னைக் காப்பாற்றும்படி ஜன்னல் வழியாக கவிதா கோரிக்கை விடுத்ததை அடுத்து போலீசார் உரிமையாளருக்குப் போன் செய்து அழைத்துள்ளனர்.

உரிமையாளர் சிவக்குமார் வெளியூர் சென்றுள்ள நிலையில், அவரது உறவினர் பெண்கள் இருவர் வந்து வீட்டைத் திறந்துவிட்டனர். "ஒரு பெண்ணை உள்ளே வைத்துப் பூட்டி வைக்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?" எனக் கேள்வி எழுப்பிய காவல் ஆய்வாளரிடம் வாக்குவாதம் செய்த அந்தப் பெண்கள், போலீசை ஏன் அழைத்தாய் என கவிதாவையும் மிரட்டினர்.

அவர்களிடமிருந்து கவிதாவை விடுவித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று புகாரைப் பெற்ற போலீசார், சிவக்குமார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கவிதாவின் கணவன் அவரைப் பிரிந்துவிட்ட நிலையில், மகனைக் காப்பாற்ற ஆன்லைன் மூலம் வீட்டு வேலைக்கு விண்ணப்பித்ததாகவும் அதன் மூலம் சிவக்குமார் வீட்டுக்கு வேலைக்கு வந்ததாகவும் கூறினார். முதல் மூன்று நாட்கள் தன்னிடம் கனிவாக நடந்து கொண்ட சிவக்குமார், அதன் பின்னர் அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தத் தொடங்கியதாக கவிதா தெரிவித்தார்.

இரவு 2 மணி வரை வேலை செய்துவிட்டு, அதன் பின்னரே உணவு அருந்த வேண்டும் என்றும் மீண்டும் காலையில் 5 மணிக்கெல்லாம் எழுந்து சமையல் செய்ய வேண்டும் என்றும் கூறிய கவிதா, சிறு சிறு விஷயங்களுக்குக் கூட ஆபாச வார்த்தைகளால் திட்டி அடித்ததாகக் கூறினார். வேலைக்கு வந்தது முதல் 18 நாட்களாகத் தன்னை அடைத்து வைத்துள்ளதாகக் கூறிய அவர், வெளியேற நினைத்தால் திருட்டுப் பட்டம் கட்டி சிறைக்கு அனுப்பி விடுவோம் என சிவக்குமார் மிரட்டியதாகவும் கூறினார்.

தாம் அரசியல் கட்சியைச் சேர்ந்தவன் என்றும்  போலீசிடமே சென்றாலும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறிய சிவக்குமார், மீறி போலீசுக்கு அழைத்தால் மகனைக் கடத்திக் கொன்று விடுவோம் என மிரட்டியதாகவும் கவிதா தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments