கார் - 80 சவரன் நகைக்காக 10 வருட காதலுக்கு பை பை..! ஜிம் மாஸ்டருக்கு லாக் அப்..!
பள்ளிப் பருவத்தில் இருந்து ஆசை காண்பித்து நெருங்கிப் பழகி, வரதட்சணைக்காக 10 வருட காதலை கழற்றி விட்டதால் போலீசாரிடம் சிக்கி உள்ள ஜிம் மாஸ்டர் விக்கி என்கிற விக்னேஸ்வர் இவர் தான்..!
சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஜிம் மாஸ்டர் விக்னேஸ்வர் 12-ஆம் வகுப்பு படித்த போது, ஆட்டோ ஓட்டுனரின் மகளான 15 வயதுடைய மாணவி ஒருவரிடம் காதல் கொண்டு நெருங்கிப் பழகி உள்ளார்.
பள்ளிப்படிப்பு முடிந்ததும், இருவரும் ஒரே தனியார் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். அப்போது திருமண ஆசை காண்பித்து, பலமுறை காதலியை மகாபலிபுரத்துக்கு லாங் டிரைவ் அழைத்துச்சென்ற விக்னேஷ்வர் அத்துமீறியதாகக் கூறப்படுகின்றது.
இவர்களின் காதல் விவகாரம் கல்லூரி நிர்வாகத்துக்குத் தெரியவந்ததால் இருவரையும் 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
கல்லூரிப் படிப்பை முடித்ததும் விக்னேஷ் சொந்தமாக ஜிம் தொடங்கி நடத்தி வந்த நிலையில், அவரது காதலியும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்துள்ளார்.
இந்த நிலையில் ஆட்டோ ஓட்டுனரான தனது தந்தையுடன் விக்னேஸ்வர் வீட்டிற்கு சென்று காதல் விபரத்தை சொல்லி திருமணத்துக்கு ஏற்பாடு செய்ய கூறியுள்ளனர்.
விக்னேஸ்வரும் அவரது பெற்றோரும் , வரதட்சணையாக சொகுசு காரும், 80 சவரன் நகைகளும் கேட்டுள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த காதலியின் தந்தை , தன்னால் முடிந்தவற்றை தருவதாக கூறி உள்ளார். என்ன செய்வதென்று தெரியாமல் காதலி குழம்பிய நிலையில் இருந்துள்ளார்.
இது குறித்து பேசலாம் என்று கடந்த ஏப்ரல் மாதம் 10 ந்தேதி ஓட்டலுக்கு காதலியை அழைத்துச்சென்ற விக்னேஷ்வர் எப்படியும் திருமணம் செய்து கொள்வதாக நம்பிக்கை தெரிவித்ததோடு அங்கு வைத்தும் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. அப்போது இருவரும் நெருக்கமாக இருந்ததை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு தன்னை மறந்து விடும்படி விக்னேஷ்வர் மிரட்டியதாக கூறப்படுகின்றது.
10 வருட காதலுக்கு பை பை சொன்ன கையோடு கடந்த மே மாதம் 13 ந்தேதி தன்னை கடத்தி கட்டாய திருமணம் செய்து வைக்க முயல்வதாக , காதலி குடும்பத்தினர் மீது விக்கி, குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் தனக்கு ஏற்கனவே மே 8 ந்தேதி வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் முடிந்து விட்டது என்றும், இனி ஆட்டோ ஓட்டுனரின் மகள் தன் வாழ்வில் தலையிடக்கூடாது என்றும் கூறி இருந்ததால் அதிர்ச்சி அடைந்த அவரது காதலி, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, பூந்தமல்லி மகளிர் காவல் நிலையத்தில் விக்னேஸ்வர் மற்றும் அவரது பெற்றோர் மீது புகார் அளித்தார்.
5 மாதங்களாக போலீசார் விசாரித்து வந்த நிலையில் ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கரின் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் விக்னேஸ்வரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
விக்னேஸ்வர் மீது பாலியல் பலாத்காரம், எஸ்.சி.எஸ்.டி வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Comments