மராத்தா பெருமையை கையில் எடுத்த பா.ஜ.க.. திருப்புமுனை தந்த அன்பு சகோதரிகள் திட்டம்.. ஆட்சியை தக்க வைத்த மகாயுதி கூட்டணி

0 1257

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி.

மகாராஷ்டிராவில் இத்தனை இடங்களில் வெற்றி பெறுவோம் என தாங்களே எதிர்பார்க்கவில்லை என்று மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள் பாஜகவினர்.. மெகா வெற்றியை அடுத்து அம்மாநில பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸை தூக்கி வைத்து கொண்டாடினர். பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி வாகை சூடியதன் பின்னணி என்ன?

நாடாளுமன்றத் தேர்தலில் பின்னடைவை சந்தித்த மகாயுதி கூட்டணி சட்டப்பேரவை தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளதற்கு அதன் தலைவர்களும், தொண்டர்களும் கருத்தொற்றுமையுடன் களப்பணியாற்றியதே முக்கிய காரணம் எனக்கூறப்படுகிறது.

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை போல், மகாராஷ்டிராவில் லட்கி பஹின் என்ற பெயரில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரத்து 500 ரூபாய் வழங்கியது பாஜக. கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டம் பாஜக கூட்டணிக்கு பெண்களின் ஆதரவு கிடைக்க முக்கிய காரணமாகவும் கூறப்படுகிறது. அதோடு, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த உதவித் தொகை 2 ஆயிரத்து 100 ஆக உயர்த்தப்படும் என்றும் மகாயுதி கூட்டணி அறிவித்திருந்தது. இதன் காரணமாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது 59.26% ஆக இருந்த பெண்களின் வாக்குச் சதவீதம் இம்முறை 65.21% ஆக உயர்ந்திருந்தது.

வீர சிவாஜியின் பெருமையை தொடர்ந்து போற்றி வந்ததும், மராத்தா சமூகம் முன்வைத்த இட ஒதுக்கீடு கோரிக்கைக்கு சாதகமாக கருத்து தெரிவித்ததும் பா.ஜ.க கூட்டணியின் வெற்றிக்கு உதவியதாகவும் கூறப்படுகிறது. மண்ணின் மைந்தர்கள் பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க இதுவே முக்கிய காரணம் எனவும் தேர்தல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

இதன் காரணமாக மராத்தா சமூகம் பெரும்பான்மையாக வசிக்கும் 100-ல் 80 தொகுதிகளை இக்கூட்டணி கைப்பற்றி உள்ளது.

ஒரு பக்கம் மராத்தா மக்களின் தேவைகளுக்கு செவி சாய்த்த போதும், மறுபக்கம் மராத்தா அல்லாத பிற ஓ.பி.சி சமூக நலத்திட்டங்களை பாஜக முழு மூச்சில் நடைமுறைப்படுத்தியதற்கு இத்தேர்தலில் நல்ல பலன் கிடைத்துள்ளது என கூறப்படுகிறது. இரண்டரை கால ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு ஓ.பி.சி.களுக்கான அரசாகவே பார்க்கப்பட்டதும் வெற்றிபெற இன்னும் ஒரு காரணம் எனக்கூறப்படுகிறது.

மகாராஷ்டிராவில் அதிக எண்ணிக்கையில் உள்ள விவசாயிகளின் ஆதரவை பெறுவது அவ்வளவு எளிதல்ல; ஆனால் அவர்களது நீர் தட்டுப்பட்டை போக்க உறுதியான நடவடிக்கை எடுத்தது, வெங்காயம் ஏற்றுமதி அனுமதி, அதிக ஈரப்பதமுள்ள சோயாபீன் கொள்முதல், பருத்தி விவசாயிகளுக்கு இழப்பீடு என பாஜக அரசின் நடவடிக்கைகள் விவசாயிகளின் ஆதரவை பெற வழிகோலியதாகவும் கூறப்படுகிறது.

ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே பாதுகாப்பாக வாழ முடியும் என்ற பாஜக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் பெரும்பான்மை சமூகத்தினரை கவர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

என்னதான் பாஜக கூட்டணி கட்சிகள் தேர்தல் பணி ஆற்றியிருந்தாலும், இந்த வெற்றிக்கு ஆர்.எஸ்.எஸ், ஏ.பி.வி.பி., விஸ்வ இந்து பரிஷத், பாரதிய மஸ்தூர் யூனியன் ஆகிய அமைப்புகளின் களப்பணியும் மெகா வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது எனவும் பாஜகவினர் தெரிவிக்கிறார்கள்.

சிவசேனாவும், தேசியவாத காங்கிரஸும் இரண்டாக உடைந்த பிறகு நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தல் என்பதால், இந்த தேர்தல் முடிவுகள் உத்தவ் தாக்கரேவுக்கும் சரத் பவாருக்கும் தனிப்பட்ட இழப்பாக மாறியுள்ளது. உண்மையான சிவசேனா ஏக்நாத் ஷிண்டே தலைமையில்தான் இருக்கிறது என்றும் அதேபோல், உண்மையான தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் தலைமையில்தான் இருக்கிறது என்றும் அவரது ஆதரவாளர்கள் உரக்க குரல் கொடுக்க இந்த முடிவு அடித்தளமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கட்சி தங்கள் வசம் இருக்குமா, தொண்டர்படை தங்களோடு தொடருமா என்ற அச்சம் ஏக்நாத் ஷிண்டேவையும் அஜித் பவாரையும் விட்டு விலகி இருக்கிறது எனலாம். அவர்களின் அரசியல் எதிர்காலம் இந்த தேர்தல் முடிவுகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், பாஜகவுக்கு இருவரும் உதவியதோடு மட்டுமல்லாமல், அக்கட்சியால் பலனும் அடைந்துள்ளனர் என்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments