அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

0 2227

இவர் தான் உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான 62 வயது கவுதம் அதானி.. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இவரது நிறுவனம் இந்தியா மட்டுமல்ல, உலகின் நூற்றுக்கணக்கான நாடுகளில் கிளை விரித்துள்ளது. துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் என பல்வேறு தொழில்களில் உச்சம் தொட்டுள்ளது அதானி குழுமம்...

ஆனால், அமெரிக்கா அரசின் சட்ட நடவடிக்கையால் தற்போது அதானி குழுமம் கடும் நெருக்கடியை எதிர்கொள்கிறது. அதானி குழுமம் மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளதன் பின்னணி என்ன?

மத்திய அரசின் கீழ் இயங்கும் SECI என அழைக்கப்படும் Solar Energy Corporation of India என்ற பொதுத்துறை நிறுவனம் சூரிய ஒளி மின்சார திட்டங்கள் மூலம் மாநில அரசுகளுக்குத் தேவையான மின்சாரத்தை தனியாரிடம் இருந்து பெற்றுத்தருவதற்காக 2011-ல் தொடங்கப்பட்டது.
SECI நிறுவனத்துடன் அதானி குழுமம் 2019-2020 காலகட்டத்தில் 12 கிகாவாட் சூரிய ஒளி மின்சார கொள்முதல் தொடர்பாக ஒப்பந்தம் போட்டதாக கூறப்படுகிறது.

அதிக விலை உள்ளிட்ட காரணங்களால், SECI நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மாநில அரசுகள் தயக்கம் காட்டியதாகவும், இதனால், கோடிக்கணக்கில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க அதானி நிறுவனம் முயன்றதாகவும் கூறப்படுகிறது. ஆந்திரா, தமிழ்நாடு, சத்தீஸ்கர் ஆகிய மாநில அரசுகள் இத்திட்டத்தில் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், FBI எனப்படும் அமெரிக்காவின் பிரதான புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் நடத்திய சோதனையில் லஞ்ச குற்றச்சாட்டிற்கான ஆதாரம் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.

தொழிலதிபர் கவுதம் அதானியின் தம்பி மகனும் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான சாகர் அதானியின் அமெரிக்க வீட்டில் கடந்த 2023 ஆண்டு மார்ச் 17 ஆம் தேதி எப்.பி.ஐ அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில், யாருக்கு எவ்வளவு லஞ்சம் என்ற பட்டியல் மற்றும் பரிவர்த்தனை தொடர்பான கடிதங்கள் ஆகியவை சிக்கியதாக கூறப்படுகிறது. விரிவான விசாரணையை அடுத்து அதானியையும் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்த்து நியூயார்க்கில் உள்ள ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது அந்நாட்டின் ஜஸ்டிஸ் டிப்பார்ட்மெண்ட்.

அமெரிக்க அரசு தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் கவுதம் அதானி, சாகர் அதானி, வினித் ஜெயின், ரஞ்சித் குப்தா உள்ளிட்டோர் லஞ்சம் கொடுக்க சதி செய்து ஆதாரங்களை அழித்ததோடு, அமெரிக்க பங்கு வர்த்தக அமைப்பு மற்றும் அமெரிக்க காவல்துறைக்கு தவறான தகவல் அளித்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அத்துடன் அமெரிக்க முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்தி, பங்குவிற்பனை மற்றும் பத்திரங்கள் மூலம் 175 மில்லியன் டாலர்களுக்கு மேல் திரட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லஞ்ச ஒழிப்பு சட்ட விதிகளுக்கு புறம்பாக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்க முயன்றதன் மூலம், தங்கள் நாட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும் அதானி குழுமத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரங்கள் அற்றவை என்றும் வழக்கை சட்டப்படி சந்திக்க தயார் என்றும் அதானி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக ப்ரூக்ளின் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. மேலும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அடுத்து, அதானி நிறுவனத்துடன் தாங்கள் மேற்கொண்டிருந்த 2.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக கென்யா அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் சட்ட நடவடிக்கையை அடுத்து இந்திய பங்குச்சந்தைகளில் அதானி நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. பங்குகளின் விலை சுமார் 25% அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளதால், சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டாளர்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments