“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

0 898

தஞ்சாவூர், மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளிக் கூடத்திற்குள் கத்தியுடன் புகுந்து ஆசிரியையை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக இளைஞரை மாணவர்களும், ஆசிரியர்களும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மாணவர்கள் தூக்கிச் சென்றும் ஆசிரியையின் உயிரை காப்பாற்ற இயலாத பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித் தொகுப்பு...

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்த முத்து என்பவரது மகள் ரமணி. 26 வயதான இவர் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழுவால் நியமிக்கப்பட்ட ஆசிரியையாக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார்.

புதன்கிழமை பள்ளிக்கு சென்ற ஆசிரியை ரமணி காலை 11 மணி அளவில் வகுப்புகள் இல்லாததால் ஆசிரியர்களின் ஓய்வறையில் அமர்ந்திருந்தார். வெளியில் மழை பெய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த அவரது நண்பர் மதன் என்ற நபர் அழைத்ததன் பேரில் வராண்டாவில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மதன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆசிரியை ரமணியை கழுத்தி மற்றும் வயிற்றில் குத்தியதாக கூறப்படுகின்றது. ஆசிரியையின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மாணவர்கள் , உயிருக்கு போராடிய ஆசிரியை ரமணியை மீட்டு கொட்டும் மழையில் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். ஆனால் வழியிலேயே ஆசிரியை ரமணி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே கத்தியுடன் நின்ற மதனை மடக்கிப்பிடித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவனுக்கு தர்ம அடி கொடுத்தனர். அருகில் அரசு நிகழ்ச்சி ஒன்றின் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசாரிடம் மதனை கத்தியுடன் ஒப்படைத்தனர். விசாரணையில் ஆசிரியை ரமணி , மதன் உடன் 2 வருடம் பழகி வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர். வீட்டிற்கு பெண் கேட்டு சென்ற மதனுக்கு, பெண் கொடுக்க க்கூடாது என்று ரமணியின் சகோதரர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.

மதன் குணம் சரியில்லை.. என்றும் அவன் வேண்டாம் என்றும்.. தம்பி கூறியதால் மதன் உடன் பழகுவதை ஆசிரியை ரமணி தவிர்த்துள்ளார். இதையடுத்து ஆசிரியை ரமணியிடம் வீட்டை விட்டு ஓடிச்சென்று திருமணம் செய்து கொள்ளலாம் வா.. என்று மதன் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகின்றது.

மதனின் நடவடிக்கை சரியில்லாத்தால் அவனுடன் பேசுவதை ரமணி தொடர்ந்து தவிர்ந்து வந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளிக்குள் கத்தியுடன் நுழைந்து, தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாகவும், அதற்கு மறுத்த ஆசிரியை பள்ளியில் இருந்து வெளியே போகச் சொன்னதாகவும் கூறப்படுகின்றது. இதனால் உண்டான ஆத்திரத்தில் ஆசிரியை ரமணியை கத்தியால் குத்தி கொலை செய்ததாக மதன் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

அரசு பள்ளிக்குள் கத்தியுடன் புகுந்து ஆசிரியை குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments