அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

0 1501

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கியுள்ள ஏடிஏசிஎம்எஸ் எனப்படும் தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் தான் இவை...

சுமார் 170 கிலோ வெடிபொருட்களை சுமார் 190 மைல் வரை தாங்கிச்சென்று தாக்கும் வல்லமை பெற்றவை இந்த ஏடிஏசிஎம்எஸ் ரக ஏவுகணைகள். வானில் மிக உயரமாக ஏவப்படும் இவை, புவி ஈர்ப்பு விசை காரணமாக மிக வேகமாக இலக்கை நோக்கி பாயும் திறன் பெற்றவை. மேலும் நகரும் ஏவுதளத்திலிருந்தே மிக எளிதாக இவற்றை ஏவ முடியும்.

ரஷ்யாவின் பிரையான்ஸ்க் பகுதியை குறிவைத்து இது போன்ற 6 ஏடிஏசிஎம்எஸ் ரக ஏவுகணைகளை உக்ரைன் ஏவியதாகவும், அதில் 5 ஏவுகணைகளை நடுவானிலேயே சுட்டு வீழ்த்தியதாகவும் ரஷ்ய ராணுவ அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒரு ஏவுகணை மட்டும் சேதமடைந்த நிலையில் பிரையான்ஸ்க் பகுதியில் உள்ள ராணுவ தொழில்நுட்ப பிரிவின் வளாகத்தில் விழுந்ததாகவும், இதனால் ஏற்பட்ட தீ பரவலை கட்டுப்படுத்திவிட்டதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலால், அப்பகுதியில் உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என்றாலும், அமெரிக்க தயாரிப்பு ஏவுகணை தங்களது நாட்டின் மீது ஏவி தாக்குதல் நடத்தப்பட்டதை ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளது.

1000 நாட்களுக்கும் மேலாக நடந்துவரும் இப்போரில், இதுவரை எல்லைப்பகுதியில் மட்டுமே தாக்குதலை நடத்திவந்த உக்ரைன் முதன் முறையாக அமெரிக்க ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்யாவின் எல்லையில் இருந்து சுமார் 80 மைல் தொலைவில் உள்ள பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்காவும், உக்ரைனும் கூட்டு சேர்ந்து நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக அணு ஆயுத பயன்பாடு என்ற பிரம்மாஸ்திரத்தை ரஷ்யா கையில் எடுத்துள்ளது. இதில் இன்னொரு அதிர்ச்சி என்னவென்றால் உலகின் மிகப்பெரிய அணு ஆயுதங்களை கொண்ட நாடு ரஷ்யா.

அணு ஆயுதம் கொண்ட நாட்டின் உதவியுடன் ரஷ்யா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். இதற்காக தங்களது நாட்டிற்கு எதிராக அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் மட்டுமே அணு ஆயுதம் பயன்படுத்தப்படும் எனும் ரஷ்யாவின் கொள்கையில் மாற்றம் செய்து புதிய உத்தரவில் புடின் கையொப்பம் இட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அணு ஆயுத கொள்கை மாற்றம் மூலம் உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்த கூடும் என்ற அச்சம் உலக நாடுகள் இடையே ஏற்பட்டுள்ளது. அணு ஆயுதங்களை தவிர்ப்பதற்கான வழிகளையே நாங்கள் பார்க்கிறோம், ஆனால் அவற்றை பயன்படுத்தும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டால் எங்களுக்கு வேறு வழியில்லை என ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு உதவுவதை நிறுத்த வேண்டும் என புடின் தொடர்ந்து எச்சரித்துவந்த நிலையில், நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு வழங்கியுள்ளது ரஷ்யாவை கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது. இதனால், உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர், ரஷ்யா மற்றும் நேட்டோ நாடுகளுக்கு இடையேயான போராக மாறும் எனவும் உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

இந்த சூழ்நிலையில் தங்களது நாடுகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் நேட்டோ நாடுகள் இறங்கியுள்ளன. அதில் அணு ஆயுத தாக்குதலை எதிர்கொள்ள தயாராக இருக்கும்படி ஸ்வீடன் தனது நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல், டென்மார்க்கும் உணவு, மருந்து ஆகிய அத்யாவசிய பொருட்களை தயார் செய்து வைக்கும்படி தங்களது குடிமக்களுக்கு இமெயில் மூலம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், ஈரான் நினைத்தால் 24 மணி நேரத்தில் அணு ஆயுதங்களை தயாரித்து தாக்குதலுக்கு பயன்படுத்தும் என அந்நாட்டின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட தலைவரான அலி கமேனி தெரிவித்துள்ளார். ஈரானின் இந்த அறிவிப்பு மேற்கு ஆசிய நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி ராணுவ பலம் வாய்ந்த ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் பிரம்மாஸ்திரமான அணு ஆயுதங்களை பயன்படுத்தி தங்களது எதிரிகள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறியுள்ளது மூன்றாவது உலகப்போருக்கும் வழி வகுக்கலாம் என உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments