திருடியே ரூ 4 கோடிக்கு நூற்பாலை புதைக்கப்பட்ட 6 தங்கக் கட்டிகள் ..! தோண்டி எடுத்த அதிகாரிகள் அதிர்ச்சி..! இப்படியும் ஒரு கொள்ளைக்கார குடும்பம்..!

0 299

தேனி மாவட்டம் பழனிச்செட்டிப்பட்டியில் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் திருடி சொந்தமாக 4 கோடி ரூபாய்க்கு நூற்பாலை வாங்கிய கொள்ளைக்கார குடும்பத்தை போலீசார் கைது செய்துள்ளனர். முட்புதரில் தோண்ட தோண்ட தங்க கட்டிகள் வந்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆட்கள் இல்லாத ஐந்து வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டு நகை பணம் திருடப்பட்டது. அதேபோல் 2024 ஆம் ஆண்டும் நான்கு வீடுகளில் பூட்டு உடைக்கப்பட்டு சுமார் 88 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவற்றை கொள்ளை போனது.

இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்த பழனிசெட்டிபட்டி காவல் ஆய்வாளர் சிவராம கிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார், இதே சாயலில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளின் பட்டியலை தயார் செய்து விசாரணையை முன்னெடுத்தனர்.

கோவை போலீசாரால் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரை மாவட்டம் கருப்பாயூரணி சேர்ந்த மூர்த்தி, பெரியகுளத்தைச் சேர்ந்த அம்சராஜன் ஆகியோர் மீது சந்தேகப்பார்வை திரும்பிய நிலையில் இருவரையும் காவலில் எடுத்து பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை செய்தனர்.

மூர்த்தி, அம்சராஜன் ஆகியோர் கூட்டாளிகளான சுரேஷ் மற்றும் அருண்குமாருடன் இணைந்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஆட்கள் இல்லாத வீடுகளின் பூட்டை உடைத்தும், ஆட்கள் உள்ள வீடுகளில் அவர்களை கட்டி வைத்து நகை, பணத்தை பறித்தும் கொள்ளையடித்தது தெரியவந்தது. கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மூர்த்தி தனது மனைவி அனிதா பிரியா, தாய் சீனித்தாய், சகோதரி லட்சுமி மற்றும் அவரின் கணவர் மோகன் ஆகியோரிடம் கொடுத்து வைத்துள்ளார்.

திருடிய பணத்தில் இந்த கொள்ளைக்கார குடும்பம் ராஜபாளையத்தில் நான்கு கோடி ரூபாய்க்கு பழைய நூற்பாலை ஒன்றை விலைக்கு வாங்கியது தெரியவந்தது. மூர்த்தி மற்றும் அவரது மனைவி திருடிய பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாகவும், திருட்டு வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக தனது மனைவி அனிதா பிரியாவை அவர் வழக்கறிஞராக படிக்க வைத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்

வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி தேனி அருகே உள்ள மாரியம்மன்கோயில்பட்டி பகுதியில் முட்புதர்களுக்குள் பாலித்தீன் கவர்களால் சுற்றி மண்ணுக்குள் புதைத்து வைத்ததாக கூறப்படுகின்றது. அதற்கு மறுநாளே கோவை போலீசார் திருட்டு வழக்கில் மூர்த்தி, அம்சராஜன், சுரேஷ் மற்றும் அருண்குமாரை கைது செய்ததால் புதைத்து வைத்திருந்த தங்க கட்டிகளை எடுக்க முடியாமல் போனதாக போலீசாரிடம் கொள்ளையர்கள் வாக்குமூலம் அளித்தனர்

இதனை அடுத்து கொள்ளையர்கள் மண்ணில் புதைத்து வைத்திருந்த 88 பவுன் எடை கொண்ட 49 லட்சம் மதிப்புள்ள 6 தங்கக் கட்டிகளை தேனி வருவாய்த் துறையினர் முன்னிலையில் , பழனிசெட்டிபட்டி போலீசார் மீட்டனர்.

திருட்டு குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக மூர்த்தியின் மனைவி அனிதா பிரியா, தாய் சீனித்தாய், சகோதரி லட்சுமி மற்றும் அவரின் கணவர் மோகன் ஆகியோரை கைது செய்த ராஜபாளையம் போலீசார் திருட்டு பணத்தில் வாங்கிய நூற்பாலை ஆவணத்தை ஏற்கனவே கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகின்றது.

தமிழகம் முழுவதும் 30 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருடிய இந்த கொள்ளையர்கள் மீது 100 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சிறப்பாக செயல்பட்டு துப்பு துலக்கிய பழனிசெட்டிபட்டி காவல் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் மற்றும் போலீசாரை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் பாராட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments