திருச்செந்தூர் கோவில் யானை.. துதிக்கையை முத்தமிட்டு செல்ஃபி.. தூக்கி அடித்ததால் இருவர் பலி..! யானை ஆவேசமான பின்னணி..
திருச்செந்தூர் கோவிலில் உடலெல்லாம் திருநீறு பூசி வெள்ளை யானையாக வலம் வந்தாலும் பக்தர்களை கனிவுடன் ஆசீர்வதித்து வந்த தெய்வானை என்ற பெண் யானை தான் இருவரை அடித்துக் கொன்ற புகாருக்குள்ளாகி உள்ளது.
திங்கட்கிழமை மதிய வேளையில் யானை ஓய்வெடுக்கும் இடத்தில் யானை பாகன் உதயகுமார், அவரை பார்க்க வந்த அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் தலை குப்புற சடலமாக கிடந்தனர். இருவரும் யானை தாக்கி பலியானதாக தகவல் வெளியானது.
மதம் ஏதும் பிடிக்காமல் யானை சாந்தமாக காணப்பட்ட நிலையில் , அங்கு கிடந்த இருவரது சடலங்களையும் மற்ற பாகன்களின் துணையுடன் மீட்டு பிணகூறாய்வுக்காக கொண்டு சென்றனர்.
யானையின் காலுக்கடியில் இருந்து செல்போன் ஒன்றையும் யானைப்பாகன் கைப்பற்றி போலீசாரிடம் ஒப்படைத்தார்
மதம் கொண்ட யானை மனிதர்களை தாக்குவது இயல்பான ஒன்று என்ற நிலையில் பெண் யானையான தெய்வானை எதற்காக தாக்கியது ? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணையை முன்னெடுத்தனர். யானை ஓய்வெடுக்கும் இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது சிசுபாலன் நீண்ட நேரம் செல்ஃபி எடுத்த போது யானை தாக்கியது தெரியவந்ததாக வனத்துறை அதிகாரி கவின் தெரிவித்தார். மேலும் யானையின் துதிக்கையில் முத்தமிடுவது போல செல்ஃபி எடுத்த போது சிசுபாலனை துதிக்கையால் தூக்கி அடித்த யானை, அவரை காப்பாற்ற வந்த பாகன் உதயகுமாரையும் தூக்கி வீசியதாகவும் அதில் இருவரும் தலையில் அடிபட்டு அடுத்தடுத்து உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
யானையின் காலுக்கு அடியில் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் தடயவியல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கோவில் யானை மட்டுமல்ல எந்த ஒரு விலங்குகளுக்கும் தொல்லை கொடுப்பது போல, அருகில் நின்று விளையாடுவதையும், செல்ஃபி எடுப்பதையும் மக்கள் தவிர்க்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கோவில் யானைகளுக்கு நீச்சல் குளம், சவர் குளியல் போன்ற ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டாலும், கோவில் யானைகள் நீண்ட நேரம் பக்தர்களுக்கு ஆசி வழங்க நின்றபடியே இருப்பதாகவும், கடந்த 2021 ஆம் ஆண்டிற்கு பின்னர் முதுமலையில் புத்துணர்வு முகாமிற்கு அழைத்துச்செல்லப்படாததால், மன அழுத்தத்தால் சில நேரங்களில் இது போன்று ஆக்ரோசமாக நடந்து கொள்வதாக விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
கோவில் யானை மிதித்து இருவர் பலியான சம்பவத்தால், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் நடை 45 நிமிடம் சாத்தப்பட்டது. பரிகார பூஜை செய்யப்பட்ட பின்னர் பக்தர்களின் தரிசனத்துக்காக மீண்டும் நடை திறக்கப்பட்டதாக கோவில் நிர்வாகம் தெரிவித்தது.
Comments