தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கிய கஸ்தூரி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்..! சிங்கிள் மதர் கோஷம் எடுபடவில்லை..
தெலுங்கு மொழி பேசும் பெண்களை அவதூறாக பேசிய வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரி, அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும் என கோஷமிட்டார்.
சென்னை எழும்பூரில் கடந்த மூன்றாம் தேதி இந்து மக்கள் கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் பெண்கள் குறித்து பேசியது சர்ச்சையானது. இதுகுறித்து, அகில இந்திய தெலுங்கு சம்மேளன பொதுச்செயலாளர் நந்தகோபால் எழும்பூர் காவல் நிலையத்தில் கஸ்தூரி மீது புகார் அளித்தார்.
சாதி, மதம், இனம், மொழி என இரு பிரிவினரிடையே பிரச்னையை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுவது, அவதூறு பேச்சின் மூலம் குற்றத்திற்கு தூண்டுவது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்தனர் போலீஸார்.
கஸ்தூரிக்கு சம்மன் அனுப்பியதும் தலைமறைவான கஸ்தூரி முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடினார். ஆனால், அவரது முன்ஜாமின் தள்ளுபடி செய்யப்பட்டதால், கஸ்தூரியை 2 தனிப்படை அமைத்து தேடினர் போலீஸார்.
ஐதராபாத்தில் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் வீட்டில் வைத்து நடிகை கஸ்தூரியை கைது செய்து சாலை மார்க்கமாகவே சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். போலீஸ் வாகனத்தில் இருந்து புன்னகையுடன் இறங்கிய கஸ்தூரியிடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலத்தை பதிவு செய்தனர் போலீஸார்.
பின்னர், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கஸ்தூரியை வாகனத்தில் ஏற்றிய போது அவர் கோஷமிட்டார்.
எழும்பூர் ஐந்தாவது நீதிமன்ற நடுவர் ரகுபதிராஜா முன்னிலையில் கஸ்தூரி ஆஜர்படுத்தப்பட்டார். தனது மகன் ஒரு சிறப்பு குழந்தை எனவும், சிங்கிள் மதராக தான் தான் அவனைப் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் முறையிட்ட கஸ்தூரி தன்னை சிறையில் அடைக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.
காவல்துறையின் வாதங்களை ஏற்ற நீதிபதி வரும் 29-ஆம் தேதி வரை கஸ்தூரியை நீதிமன்ற காவலில் சிறை வைக்க உத்தரவிட்டார். வாகனத்தில் ஏற்றிய போது "இது எதிர்பார்த்ததுதான்" என கூறிக் கொண்டே போலீஸ் வாகனத்தில் சென்றார் கஸ்தூரி.
மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார் கஸ்தூரி.
Comments