“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

0 1232

சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சைப்பிரிவு மருத்துவரை கத்தியால்  சரமாரியாக குத்தி விட்டு சாவகாசமாக நடந்து சென்ற இளைஞரை வாசலில் வைத்து மடக்கிப்பிடித்தனர்

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு பல் நோக்கு மருத்துவமனையில் புற்று நோய் மருத்துவராக இருப்பவர் பாலாஜி ஜெகன்னாதன். காலை 10:30 மணியளவில் அவரிடம் சிகிச்சை பெற்று கொள்ள ஓ.பி சீட்டுடன் வந்த இளைஞர் ஒருவர் அறைக்கதவை மூடி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை தலை கழுத்து என 7 இடங்களில் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகின்றது. மருத்துவர் பாலாஜி ரத்த வெள்ளத்தில் மயங்கிச்சரிந்த நிலையில், அவரை குத்திய விக்னேஷ் சாவகாசமாக நடந்து சென்றார்

மருத்துவரை குத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை மருத்துவமனை வளாகத்திலேயே தூக்கி வீசி விட்டு சென்ற இளைஞரை பிடிக்காமல் செக்யூரிட்டிகள் அவரை கடந்து ஓடினர், வாசலில் நின்ற மருத்துவரிடம் சென்று கத்தி குத்து இளைஞர் குறித்து செக்கியூரிட்டிகள் புகார் தெரிவித்தனர்.

அவர் வெளியே செல்லவிடாமல் மறித்த உடன் “எங்க அம்மாவுக்கு சரியா ட்ரீட் மெண்ட் கொடுக்கல.. ” என்று அந்த இளைஞர் ஆவேசமானார், அதற்குள் மற்ற மருத்துவர்கள் ஓடி வந்து அந்த இளைஞரை மடக்கிப்பிடித்து தரையில் அமர வைத்தனர்.

மருத்துவரை குத்த பயன்படுத்தப்பட்ட கத்தியை மீட்ட போலீசார் , அந்த இளைஞரின் முகத்தை மூடி கிண்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்

விசாரணையில் கத்தியால் குத்திய நபர் பெருங்களத்தூர், காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த மனோகர் என்பவரின் மகன் விக்னேஷ் என்பதும், இவர் தனது தாயார் பிரேமாவின் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைக்கு வந்ததும் தெரியவந்தது. நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்ட தனது தாயை கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை அரசு மருத்துவர் பாலாஜியிடம் சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார் விக்னேஷ். தாயாருக்கு ஹீமோ சிகிச்சை மட்டும் அளித்த நிலையில் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாததால், தனது மாமா பரிந்துரையின் பேரில், விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவரிடம் தாயாருக்கு சிகிச்சைக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

அப்போது சிறிது முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்படாததால் நோய் முற்றிவிட்டது எனவும் அதனால் தாயை முழுமையாக காப்பாற்ற இயலாது என்றும் அந்த மருத்துவர் தெரிவித்ததாக கூறியுள்ளார். பூந்தமல்லி தனியார் மருத்துவமனை ஒன்றில் தனது தாய்க்கு ஹிமோ சிகிச்சை செய்ய ஒவ்வொரு முறையும் தலா 20 ஆயிரம் வரை செலவு ஆனதால் செவ்வாய்கிழமை அந்த மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

தனது அம்மாவிற்கு வீட்டில் ஆக்சிஜன் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், வலியை பொறுத்துகொள்ள இயலாமல் தனது தாய் கதறித்துடிப்பதை கண்டு அரசு மருத்துவர் பாலாஜியின் மீது கட்டுக்கு அடங்காத ஆத்திரம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார் விக்னேஷ்.

இதன் தொடர்ச்சியாக கத்தி ஒன்றை மறைத்து எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று மருத்துவர் பாலாஜியை சந்தித்து விக்னேஷ் நியாயம் கேட்டுள்ளார். “தங்களது தவறான சிகிச்சையால் நோய் முற்றி தனியார் மருத்துவமனையில் லட்சக்கணக்கில் பணம் செலவழித்து விட்டேன் உரிய இழப்பீடு தாருங்கள் இல்லை நீதிமன்றத்திற்கு செல்வேன்..” என்று விக்னேஷ் சண்டையிட்டுள்ளார். அப்போது மருத்துவர் பாலாஜி , சட்டையை பிடித்து வெளியே போகச்சொல்லி தள்ளியதால், கதவை இழுத்துப்பூட்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மருத்துவரை சரமாரியாக குத்தியதாக விக்னேஷ் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர் .

இதற்கிடையே கிண்டி அரசு மருத்துவமனையின் முன்பு 10 கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments